ஷா ஆலம், பிப் 23- கோல குபு பாரு- ராசா சாலையில் உலு சிலாங்கூர் தோட்ட அருகே குப்பைகளைச் சட்டவிரோதமாகக் கொட்டிய லோரியை உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக அமலாக்கப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
அப்பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இஸூசு ரக லோரி பறிமுதல் செய்யப்பட்டதாக நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் 2007ஆம் ஆண்டிற்கான குப்பை சேகரித்தல் மற்றும் அழித்தல் சட்டத்தின் 4வது துணைச் சட்டப் பிரிவின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என அது தெரிவித்தது.
இம்மாவட்டத்தில் குப்பைகளைச் சட்டவிரோதமாகக் கொட்டுவோர் குறித்த தகவல்களைத் தங்களுக்கு தெரிவித்து உதவும்படி பொது மக்களை நகராண்மைக் கழகம் கேட்டுக் கொண்டது.
இத்தகைய குற்றங்களைப் புரிவோர் பிடிபடும் அளவுக்கு ஆதாரங்களை வழங்கும் பொது மக்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.








