ஷா ஆலம், பிப் 23: சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள ஜெலாஜா ஏசான் ரக்யாட் என்னும், மலிவு விற்பனை திட்டத்தில் இனப் பாகுபாடு இல்லை என டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் விளக்கம் அளித்தார்.
இந்த மலிவு விற்பனை உட்பட ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாஙில் இடம்பெற்றுள்ள 44 திட்டங்களும் அனைத்து இன மக்களுக்கும் பொதுவானது என அவர் தெரிவித்தார். இத்திட்டங்கள், அனைத்தும் எல்லா இன மக்களும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மலிவு விற்பனை திட்டத்தில் இந்தியர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என தமிழ் நேசன் டிவி வெளியிட்ட செய்தியை டாக்டர் குணராஜ் ஏற்க மறுத்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் செந்தோசா உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளிலும் இந்த மலிவு விற்பனை ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், செந்தோசாவில் 6 முறை இம் மலிவு விற்பனை நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். இந்த விற்பனையின் போது அதிகமான இந்தியர்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்களை வாங்கும் வாய்ப்பினைப் பெற்றனர் என்று அவர் தெரிவித்தார்.
மாநில மக்களுக்காகக் குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர்களுக்கு உதவும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இல் மலிவு விற்பனை திட்டத்தின் மூலம் அனைத்து இன மக்களும் பயனடைந்துள்ளனர் என்றார் டாக்டர் குணராஜ்.








