கோம்பாக், பிப் 23- குவாங், அஸாலினா கோர்ட் தாசேக் புத்ரியில் நேற்று நடைபெற்ற குவாங் சட்டமன்றத் தொகுதி நிலையிலான மலிவு விற்பனைக்குப் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மலிவு விற்பனையில் கலந்து கொண்டவர்கள் மாநில அரசின் இந்த முன்னெடுப்பைப் பெரிதும் வரவேற்றனர்.
தரமான பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்காகத் தாம் இந்த விற்பனையை எதிர்பார்த்து பெரிதும் காத்திருந்ததாக இல்லத்தரசியான திருமதி த.மாரியம்மாள் (வயது 54) கூறினார்.
இந்த விற்பனையில் பொருட்களை வாங்குவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடிகிறது. இது தவிர பொருட்களும் தரமாக உள்ளன. வெளி சந்தையில் ஒரு கோழி 20.00 வெள்ளி விலையில் விற்கப்படுகிறது. ஆனால் இங்கு 10.00 வெள்ளிக்கு கிடைக்கிறது. அதே போல் சி கிரேடு முட்டை ஒரு தட்டு 12.00 வெள்ளிக்கு விற்கப்படும் நிலையில் இங்கு பி கிரேடு முட்டை வெறும் 10.00 வெள்ளிக்கு கிடைக்கிறது. இதுவரை ஐந்து முறை இந்த மலிவு விற்பனையில் கலந்து கொண்டுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டார்.
குவாங் தொகுதி நிலையில் நடத்தப்படும் இந்த விற்பனை பொது மக்களுக்குக் குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்குப் பேருதவியாக உள்ளதாகப் பஸாரினா ஜொஹாரி (வயது 54) கூறினார்.
நான் ஓய்வூதியத் தொகையாகக் கிடைக்கும் மாதம் 2,000 வெள்ளியைத் தான் சார்ந்திருக்கிறேன். இந்த திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் பணத்தை ஓரளவு மிச்சப்படுத்த முடிகிறது என்றார் அவர்.
இதனிடையே, சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மலிவு விற்பனை பொது மக்களுக்குக் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்குப் பேருதவியாக உள்ளதாக குடும்ப மாதான நோராஸ்மிடார் பிரேமில் (வயது 46) சொன்னார்.
தற்போது பொருள் விலை ஏற்றம் கண்டுள்ள நிலையில் அதிக பிள்ளைகளைக் கொண்ட பி40 குடும்பங்களுக்குப் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.








