ஷா ஆலம், பிப் 23- இவ்வார இறுதியில் கோம்பாக் மற்றும் கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கோம்பாக் மாவட்ட நிலையிலான திட்டம் வரும் சனிக்கிழமை தாமான் மெலாவத்தி ரமலான் சந்தைப் பகுதியில் நடைபெறவுள்ள வேளையில் கோல சிலாங்கூரிலுள்ள புஞ்சா ஆலம், ஈக்கோ கிராண்டியர் எக்ஸ்பிலேனெட்டில் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டிற்கான இந்த ஜெலாஜா கித்தா சிலாங்கூர் திட்டம் கடந்த சனிக்கிழமை கிள்ளான், ஸ்ரீ பெரந்தாவ் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் தொடக்கியது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உலு சிலாங்கூர் பத்தாங் காலியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் வரை மேலும் எட்டு மாவட்டங்களிலும் நடத்தப்படும்.
மாநில அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டுச் சேர்க்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த கித்தா சிலாங்கூர் பயண இயக்கம் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை விட சிறிய அளவில் நடத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் இலவச மருத்துவப் பரிசோதனை, மலிவு விற்பனை, கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெறும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஐ.பி.ஆர். எனப்படும் பெடுலி ராக்யாட் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக விளங்கும் இந்த ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் 35 கோடி வெள்ளி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.








