கோலாலம்பூர், பிப் 22 - கும்புலான் பெராங்சாங் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனத்தின் (கே.பி.எஸ்.) துணை நிறுவனமான அக்வா-ஃப்ளோ சென்.பெர்ஹாட், பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்துடன் 1 கோடியே 29 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான தண்ணீர் மீட்டர் விநியோகம் தொடர்பான கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி 1 தேதி முதல் அடுத்தாண்டு டிசம்பர் 31 வரையிலான 24 மாத காலத்திற்கு நீர் மீட்டர்களை மேம்படுத்துதல், இடம்பெயர்தல் மற்றும் மாற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்வதாகப் பங்குச் சந்தை ஆணையத்திற்கு அனுப்பிய செய்தியில் கே.பி எஸ். கூறியது.
2023 டிசம்பர் 31 முதல் 2024 டிசம்பர் 31வரையிலான நிதியாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் நிகரச் சொத்துக்களுக்கு இந்த ஒப்பந்தம் சாதகமான பங்கினை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நிறுவனம் தெரிவித்தது.








