ஷா ஆலம், பிப் 21- சிலாங்கூர் மாநிலத்தில் பொழுதுபோக்கு முகாம்களை நடத்துவோர் தங்கள் நடவடிக்கை தொடர்பான தகவல்களைச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்காலிக லைசென்ஸ் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதை எளிதாக்கும் நோக்கில் கடந்த மாதம் முதல் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு தரும்படி அனைத்து பொழுதுபோக்கு முகாம் நடத்துநர்களையும் தாம் கேட்டுக் கொள்வதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்பதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களைத் தொடர்பு கொள்ளும்படி அனைத்து பொழுதுபோக்கு முகாம் நடத்துநர்களையும் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் பொழுதுபோக்கு மையங்கள் தொடர்பான துல்லியமான தகவல்களை மாநில அரசு கொண்டிருக்க முடியும் என்றார் அவர்.
அதன் பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கையாகச் சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு மையங்களின் இடத்தின் சூழலைப் பொறுத்து அம்மையங்களுக்குத் தற்காலிக லைசென்ஸ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் சொன்னார்.
இந்த முயற்சிக்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் மற்றும் காஜாங் நகராண்மைக் கழகத்திலுள்ள சில பொழுதுபோக்கு முகாம் நடத்துநர்களிடமிருந்து மறுமொழி கிடைத்துள்ளதாகச் சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.
இவ்விரு ஊராட்சி மன்றப் பகுதிகளிலும் அதிகமான பொழுது போக்கு முகாம்கள் உள்ளன. தங்கள் நடவடிக்கை குறித்த தகவல்களை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அவர்.








