ஷா ஆலம், பிப் 21- இங்கு நேற்றிரவு நடைபெற்ற கார்பன் 2022 ஆம் ஆண்டிற்கான ‘’ குறைந்த கார்பன்’’ நகருக்கான விருதளிப்பு நிகழ்வில் தீவிரக் கார்பன் குறைப்பு முயற்சிக்கான சிறப்பு விருது உட்பட 26 விருதுகளை ஷா ஆலம் மாநகர் மன்றம் வென்றது.
இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த விருதளிப்பு நிகழ்வில் 2030ஆம் ஆண்டு குறைந்த கார்பன் நகர சவால் பிரிவில் 25 வைர அங்கீகார விருதுகளையும் இந்த மாநகர் மன்றம் தட்டிக் சென்றது.
குறைந்த கார்பன் வெளியேற்றத்தைக் கொண்ட மாநகராக ஷா ஆலமை உருவாக்கும் நீண்ட கால அடிப்படையிலானத் திட்டம் வெகு காலத்திற்கு முன்னரே அமல்படுத்தப்பட்டு விட்டதாக டத்தோ பண்டார் டாக்டர் நோர் புவாட் அப்துல் ஹமிட் கூறினார்.
இந்த முன்னெடுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக வரும் 2030 ஆம் ஆண்டுவாக்கில் ஷா ஆலமைக் குறைந்த கார்பன் வெளியேற்ற நகரமாக உருவாக்கும் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரும் குறிப்பாக மாநகரின் மத்தியில் உள்ள அனைத்து கட்டிட உரிமையாளர்களும் முழு ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இதே நிகழ்வில் சிறப்பு விருதுக்கான பிரிவில் 60,373 டன் கார்பன் டியோக்சிட்டைக் குறைப்பதில் வெற்றி கண்ட சிப்பாங் நகராண்மைக் கழகத்திற்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இந்த விருது கிடைக்கப் பெற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சிப்பாங் நகராண்மை கழகத் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன், குறைந்த கார்பன் வெளியேற்ற நகரை உருவாக்குவதற்குத் தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.








