ஷா ஆலம், பிப் 15- கிள்ளான், புக்கிட் கூடா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிலத்தைக் கொள்முதல் செய்ய எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் 90,000 வெள்ளி நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்த மானியத்தின் வழி அந்த ஆலயம் பல ஆண்டுகளாக எதிர்நோக்கி வந்த நிலப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகப் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
மொத்தம் 140,000 வெள்ளி மதிப்பிலான அந்த நிலத்தை கொள்முதல் செய்வதற்கு எம்.பி.ஐ. வாயிலாக மாநில அரசு 90,000 வெள்ளியை வழங்கிய வேளையில் எஞ்சிய 50,000 வெள்ளியை ஆலய நிர்வாகம் திரட்டியதாக அவர் தெரிவித்தார்.
நேற்று இங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் மாநில அரசின் நிதியை ஆலயப் பொறுப்பாளர்களிடம் வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் எம்.பி.ஐ. தொடர்பு மற்றும் வர்த்தகப் பிரிவு தலைவர் ஜூனைடி ஜூமாடியும் கலந்து கொண்டார்.
இந்த ஆலயம் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்திருந்தது. இதன் நில உரிமை தொடர்பான பிரச்சனை நான் மாநிலச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற காலந்தொட்டு நீடித்து வந்தது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் பல கட்டப் பேச்சுவார்த்தையின் பலனாக ஆலயம் அமைந்துள்ள நிலத்தை 140,000 வெள்ளிக்கு வழங்க அதன் உரிமையாளர் முன்வந்தார்.
இதனைத் தொடர்ந்து மாநில அரசின் சார்பில் 90,000 வெள்ளியை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 50,000 வெள்ளி ஆலய நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்டது என்றார் அவர்.
இதன் மூலம் நீண்ட காலமாக இழுபறியாக இருந்து வந்த நிலப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு அந்த ஆலயம் சொந்த நிலத்தில் செயல்படுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத்துறை கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
கடந்த 1930ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஆலயம் உருஸ் செர்காஸ் சென். பெர்ஹாட் எனும் நிறுவனத்துக்குச் சொந்தமான 5,000 சதுர அடி நிலத்தில் வீற்றிருந்தது.








