கிள்ளான், பிப் 15- மாநில அரசின் மலிவு விற்பனைத் தொடங்கப்பட்ட ஒன்றரை மாதக் காலத்தில் செமெந்தா தொகுதியைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மலிவு விற்பனைக்குப் பொது மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருவதாகச் செமெந்தா சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அஃப்ரிஷா அஜிசி கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை செமெந்தா தொகுதியில் ஐந்து முறை மலிவு விற்பனையை நடத்தியுள்ளோம். இந்த விற்பனையின் வழி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
மற்ற இடங்களைக் காட்டிலும் பொருள்களின் விலை குறைவாக உள்ளதால் இந்த திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் பரவலாக ஆதரவு கிடைத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மலிவு விற்பனையை நடத்தும் ஒவ்வொரு முறையும் காலை 8.00 மணி முதல் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கத் தொடங்குகின்றனர். கிராமங்கள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் நடைபெறும் இந்த மலிவு விற்பனையின் போது அந்த இடமே பரபரப்புக்குள்ளாகி விடுகிறது என்றார் அவர்.
இங்குள்ள கம்போங் தோக் மூடா சமூக மண்டபத்தில் நடைபெற்ற மலிவு விற்பனையில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மலிவு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் பொருள்களின் அளவை அதிகரிக்கும்படியும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விற்பனையில் பலருக்குப் பொருள்கள் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் குறைபட்டுக் கொண்டனர் என்று அவர் மேலும் சொன்னார்.








