மேரு, பிப் 13- மாநில அரசின் மலிவு விற்பனையில் பொருள்கள் வாங்குவதற்கு ஏதுவாக வசதி குறைந்த 250 பேருக்கு மேரு சட்டமன்றத் தொகுதி 250 வெள்ளி உதவித் தொகையை வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி முதல் தொகுதியில் நடைபெற்ற ஜெலாஜா ஏசான் ராக்யாட் விற்பனைத் திட்டத்தில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் பிரதிநிதி நோர்லினா நயான் கூறினார்.
இந்நோக்கத்திற்காக மேரு தொகுதி 12,500 வெள்ளியைச் செலவிட்டுள்ளதாகக் கூறிய அவர், மூத்தக் குடிமக்கள், தனித்து வாழும் தாய்மார்கள், வேலை இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தரப்பினர் இதன் மூலம் பயன் பெற்றனர் என்றார்.
கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் மேரு தொகுதியில் 10 முறை மலிவு விற்பனை நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் 25 பேருக்கு 50 வெள்ளி உதவித் தொகையை வழங்கினோம் என்றார் அவர்.
மாநில அரசின் மலிவு விற்பனையில் கலந்து கொள்ளும் வசதி குறைந்தவர்களுக்கு இந்த உதவி பெரிதும் துணை புரியும் எனத் தாங்கள் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இங்குள்ள கம்போங் புடிமான் அல்-ஃபாலா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற மலிவு விற்பனையின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஒத்துழைப்புடன் மேலும் பத்து முறை மலிவு விற்பனையை இத்தொகுதியில் தாங்கள் நடத்தவுள்ளதாக அவர் சொன்னார்.








