கோலாலம்பூர், அக் 7- வணிகர் ஒருவரை துப்பாக்கியை பயன்படுத்தி மிரட்டியதாக நம்பப்படும் ஆடவரை போலீசார் செர்டாங்கிலுள்ள வீடொன்றில் நேற்று கைது செய்தனர்.
ஆடவர் ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் படத்தையும் கொலை மிரட்டலையும் வாட்ஸ்ஆப் புலனம் வாயிலாக விடுத்ததாக பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளர் செய்த புகாரைத் தொடர்ந்து 41 வயதுடைய அந்தே சந்தேகப் பேர்வழி தடுத்து வைக்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.அன்பழகன் கூறினார்.
செர்டாங் வட்டாரத்தில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தியிருக்கும் வணிகர்களிடம் பாதுகாப்பு பணம் கோரி மிரட்டும் நடவடிக்கையில் அந்த ஆடவர் ஈடுபட்டு வந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைதான அந்த ஆடவரிடமிருந்து பகுதி தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் எட்டு தோட்டாக்களை தாங்கள் காஜாங்கில் கைப்பற்றியதாக அவர் மேலும் சொன்னார்.
அந்த ஆடவர் விசாரணைக்காக நாளை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பின்னர் அவ்வாடவர் துப்பாக்கி பறிமுதல் தொடர்பான விசாரணைக்காக காஜாங் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றார்.
அந்த ஆடவரால் மிரட்டலுக்கு ஆளானவர்கள் இந்த விசாரணைக்கு உதவ முன்வருமாறும் அவர் அன்பழகன் கேட்டுக் கொண்டார்.








