கோலாலம்பூர், மார்ச் 31- பொது இடங்களில் புகைப் பிடித்தது தொடர்பான குற்றங்களுக்காக தனிநபர்கள் மற்றும் வணிக மைய உரிமையாளர்களுக்கு 11,250 வெள்ளி அபராதத் தொகையை உள்ளடக்கிய 33 குற்றப்பதிவுகளை சுகாதார அமைச்சு வெளியிட்டது.
நேற்றிரவு கோலாலம்பூரில் 13 மையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையின் போது இந்த குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாக சுகாதார அமைச்சின் புகையிலை கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் டாக்டர் நோராயான ஹசான் கூறினார்.
2004 ஆம் ஆண்டு புகையிலை கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் இந்த குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன. தடை செய்யப்பட்ட இடங்களில் புகை பிடித்ததற்காக 21 குற்றப் பதிவுகளும் புகைப்பதற்கு எதிரான அறிவிப்புகளை உணவக உரிமையாளர்கள் வைக்கத் தவறியதற்காக 12 குற்றப்பதிவுகளும் வெளியிடப்பட்டன என்றார் அவர்.
இச்சோதனை நடவடிக்கையில் சமூகத்தால் இழிவாக பார்க்கப்படும் ஷிஷா புகைப்பழக்கத்திற்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புகைப்பழக்கம் என்பது வழக்கமான சிகிரெட் அல்லது மின் சிகிரெட் பழக்கத்தை என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது. எனினும், இந்த ஷிஷா புகைத்தலும் புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றிரவு 8.00 மணி தொடங்கி நான்கு மணி நேரத்திற்கு நீடித்த இந்த சோதனை நடவடிக்கையில் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச சுகாதார இலாகா மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் 65 அமலாக்கத் துறையினர் பங்கு கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.








