புத்ராஜெயா, நவ.24 – செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பத் துறைகளில் முன்னேற்றம் காண்பதுடன், நாட்டின் சமய நம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும் மலேசியா தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் உண்மையான வலிமை தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் மட்டுமல்லாமல், மக்களின் இறை நம்பிக்கை, நற்பண்புகள் மற்றும் உயரிய ஒழுக்க விழுமியங்களிலும் அடங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற சர்வதேச கத்மு சமாஃ ஹதீஸ் ஜாமிஉத் திர்மிதி மற்றும் அல்-ஷமாயில் அல்-முஹம்மதிய்யா நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், நவீன வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் அதேவேளையில், மலேசியாவின் தேசிய அடையாளம், சமய அடித்தளம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் புறக்கணிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த அணுகுமுறை 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கருப்பொருளான “வானத்தை எட்டும் இலட்சியங்கள்; விழுமியங்களில் ஆழமாக வேரூன்றிய அடித்தளம்” என்பதிலும் பிரதிபலிப்பதாக அன்வார் தெரிவித்தார்.
இதனிடையே, நிகழ்ச்சியில் இந்தியாவின் தலைமை முஃப்தி ஷேக் அபூபக்கர் அஹ்மத் அல்-மலிபாரி மற்றும் ஷேக் உஸாமா சயீத் மஹ்மூத் ஆகியோர் பிரதமர் அன்வாருக்கு சிறப்பு ஹதீஸ் சனத் சான்றிதழை வழங்கி கௌரவித்தனர்.
சுமார் 10,000 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 40 இஸ்லாமிய அறிஞர்களும் பங்கேற்றனர்.







