கோலாலம்பூர், நவ 17 :தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகம் (PTPTN), தனது ' 2026 கடனாளிகள் நட்பு மாதம் ' (Bulan Mesra Peminjam - BMP) திட்டத்தின் மூலம் கடனாளிகளுக்கு ஆலோசனைச் சேவைகளையும், கடனை மறுசீரமைப்பு செய்வதற்கான வசதிகளையும் வழங்கி வருகிறது.
நவம்பர் 1 முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நடவடிக்கையின் மூலம், கடனாளிகள் தங்களது நிதித் திறனுக்கு ஏற்பக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முறைகளைச் சீரமைத்துக் கொள்ளவும், உரிய ஆலோசனைகளைப் பெறவும் வாய்ப்பளிக்கப்படுவதாக PTPTN இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
'நிலையான கல்விப் பிரச்சாரத்தை' முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், குறிப்பாகக் கடன் நிலுவைத் தொகை வைத்திருப்பவர்கள் PTPTN நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களுக்குப் பொருத்தமான திருப்பிச் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
"கடனை மறுசீரமைப்பு செய்தல், கடன்களை ஒருங்கிணைத்தல் மற்றும் 'உஜ்ரா' (Ujrah) திட்டத்திற்கு மாறுதல் ஆகியவற்றிற்காக, மொத்த நிலுவைத் தொகையில் குறைந்தபட்சம் 20 விழுக்காடு அல்லது 1,000 ரிங்கிட் (இதில் எது அதிகமோ அந்தத் தொகை) செலுத்தும் சலுகையையும் PTPTN வழங்குகிறது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 1 முதல் 15-ஆம் தேதி வரை, PTPTN மாநில மற்றும் கிளை அலுவலகங்களின் சேவை முகப்பு நேரங்கள் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
ஞாயிறு முதல் வியாழன் வரை செயல்படும் திரெங்கானு, கெடா, கிளந்தான் மற்றும் சபா ஆகிய மாநிலங்களைத் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள சேவை முகப்புகளுக்கு இந்த நேர நீட்டிப்பு பொருந்தும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில மற்றும் கிளை PTPTN அலுவலகங்களின் சேவை முகப்புகள் டிசம்பர் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
கடனாளிகள் மிகவும் எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் தங்களது பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஏதுவாக பல்வேறு சேவை வழிகளை வழங்கும் '#PTPTNSediaBantu' முன்னெடுப்பையும் PTPTN செயல்படுத்தி வருகிறது.







