புதிய அவசர எச்சரிக்கையைப் பெற கைபேசி மென்பொருளைப் புதுப்பிக்குமாறு MCMC அறிவுறுத்து

19 நவம்பர் 2026, 7:49 AM
புதிய  அவசர எச்சரிக்கையைப் பெற கைபேசி மென்பொருளைப் புதுப்பிக்குமாறு  MCMC அறிவுறுத்து
புதிய  அவசர எச்சரிக்கையைப் பெற கைபேசி மென்பொருளைப் புதுப்பிக்குமாறு  MCMC அறிவுறுத்து

ஷா ஆலாம், நவ 19 : நாட்டில் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய முன்னறிவிப்பு அபாய எச்சரிக்கை அமைப்பின் (EWS) கீழ் அவசர அறிவிப்புகளைத் தங்களது சாதனங்கள் பெறுவதை உறுதிச் செய்ய, மலேசியர்கள் தங்களது கைபேசிகளின் இயங்குதளங்களைப் (Operating Systems) புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யவோ, பதிவு செய்யவோ அல்லது தனிப்பட்ட சேவைக்குச் சந்தா செலுத்தவோ தேவையின்றி, குறிப்பிட்ட புவியியல் பகுதிகளுக்குள் உள்ள இணக்கமான கைபேசிகளுக்கு ஒரே நேரத்தில் எச்சரிக்கைகளை அனுப்ப இந்த அமைப்பு 'செல் பிராட்காஸ்ட் சிஸ்டம்' (Cell Broadcast System) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) தெரிவித்தது.

இறுதித் தொழில்நுட்ப உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டு, iOS 27.2 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் ஆப்பிள் ஐபோன் 11 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்கள், ஆண்ட்ராய்டு 12 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் ஆண்ட்ராய்டு கைபேசிகள் மற்றும் EMUI 16 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும் ஹுவாவெய் (Huawei) சாதனங்கள் ஆகியவை இந்த EWS எச்சரிக்கைகளை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது மக்கள் தங்களது சாதனங்களுக்குக் கிடைக்கும் அண்மைய மென்பொருள் புதுப்பிப்புகளை (Software updates) நிறுவி, கைபேசியை மறுதொடக்கம் (Restart) செய்து, பொருந்தக்கூடிய இடங்களில் அவசர எச்சரிக்கை அமைப்புகள் (Emergency alert settings) இயக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த EWS அமைப்பை அறிமுகப்படுத்தவும், எச்சரிக்கைகள் எவ்வாறு வழங்கப்படும் என்பதை விளக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் பேரிடர் தயார்நிலையை ஏற்படுத்துவதில் ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஊடகத் தலைமை ஆசிரியர்களுடன் இன்று சிறப்பு விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டதாக MCMC அறிக்கையில் தெரிவித்தது.

சைபர்ஜெயாவில் உள்ள ஆணையத்தின் கட்டிடத்தில் நடத்தப்பட்ட உள் தொழில்நுட்பச் சோதனை மூலம் இதற்கான செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

மேலும் இன்றைய சோதனை, இத்திட்டத்தை விரிவாகச் செயல்படுத்துவதற்கு முன்பு அமைப்பை மதிப்பீடு செய்து மேம்படுத்துவதற்கான உள் தொழில்நுட்பச் சோதனை மட்டுமே என்றும், பெரிய அளவிலான சோதனைகள் படிப்படியாக நடத்தப்படும் என்றும் MCMC தெளிவுபடுத்தியது.

அவசர எச்சரிக்கைகளை இன்னும் விரைவாகவும் துல்லியமாகவும் வழங்கும் நாட்டின் திறனை வலுப்படுத்த, MCMC, நட்மா-தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு (Nadma), தொடர்புடைய தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் ஒத்துழைப்புடன் இந்த புதிய முன்னறிவிப்பு அபாய எச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

அவசர எச்சரிக்கைகள் கிடைக்கும்போது அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கு விழிப்புடன் இருந்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் நினைவூட்டப்பட்டுள்ளனர்.

பேரிடர்களை எதிர்கொள்வதில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஏற்கனவே உள்ள எச்சரிக்கை வழிமுறைகளுக்குத் துணையாக இந்த புதிய அமைப்பு செயல்படும் என்று MCMC தெரிவித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.