ஷா ஆலாம், நவ 19 : சிலாங்கூர், கோலாலம்பூர், கிளாந்தான், பகாங் ஆகிய மாநிலங்களில் பொதுமக்களுக்கு 'முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புச்' சோதனை இன்று நடத்தப்படும் என்ற தகவலை மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் (SKMM) மறுத்தது.
சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் செயலியில் இது குறித்துப் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று ஆணையம் தெளிவுபடுத்தியது.
இன்று திட்டமிடப்பட்டிருக்கும் செயல்பாடு என்பது, முன்னெச்சரிக்கை அமைப்பின் தயார்நிலை மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கான உள் தொழில்நுட்பச் சோதனையை மட்டுமே உள்ளடக்கியது என்றும் அவ்வாணையம் தெரிவித்தது.
இவ்வமைப்பின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கு முன்பான முன்னேற்பாடாகவே இந்தச் சோதனை நடத்தப்படுகிறதே தவிர, குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள பொதுமக்களுக்கான எச்சரிக்கைச் சோதனை அல்ல என்று அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று SKMM பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் செயல்பாடு குறித்த அண்மைய அறிவிப்புகள் மற்றும் தகவல்களைப் பெறுவதற்கு SKMM-இன் அதிகாரப்பூர்வத் தளங்களைப் பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.






