ஷா ஆலாம், நவ 17 : 2.7 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மடானி கடலடி கேபிள் இணைப்பு (SALAM) திட்டத்தை வடிவமைத்து, செயல்படுத்தி மற்றும் நிர்வகிப்பதற்கான உலகளாவிய சேவை வழங்குநராக டி.எம். டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தை (TM) மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) நியமித்துள்ளது.
உலகளாவிய சேவை வழங்கல் நிதியின் (USP) மூலம் நிதியளிக்கப்படும் இந்தத் திட்டம், தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் ஆகியவற்றுக்கு இடையேயான தகவல் தொடர்பு இணைப்புத் திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று MCMC தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் தொடர்புகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தற்போதுள்ள கடலடி கேபிள்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் சேவைத் தடையை ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காகத் தரவுப் போக்குவரத்திற்கான மாற்றுப் பாதையையும் இந்த அமைப்பு வழங்குகிறது.
“இதன் மூலம் சமூகங்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு மிகவும் நம்பகமான டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்கு இது ஆதரவளிக்கிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
சுமார் 5,500 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த அமைப்பு, அல்காடெல் சப்மரைன் நெட்வொர்க்ஸ் (ASN) நிறுவனத்தின் கடலடி கேபிள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டி.எம். (TM) நிறுவனத்தால் செயல்படுத்தப்படும்.
2017-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தற்போதைய கடலடி கேபிள் வலையமைப்பின் பயன்பாட்டுத் திறன் தற்போது சுமார் 85 சதவீதத்தை எட்டியுள்ளதால், இந்தப் புதிய உட்கட்டமைப்புக்கான தேவை மிகவும் அவசரமானதாக மாறியுள்ளது.
தீபகற்ப மலேசியாவில் செராத்திங் மற்றும் செடிலி; சரவாக்கில் கூச்சிங், சிபு (மாத்து) மற்றும் பிந்துலு (சமலாஜு); சபாவில் கோத்தா கினபாலு, கூடாட், புலாவ் பாங்கி, சண்டக்கான் மற்றும் தாவாவ் ஆகிய இடங்களில் 10 புதிய கடலடி கேபிள் தரையிறங்கும் நிலையங்களை அமைப்பதும் 'சலாம்' (SALAM) திட்டத்தில் அடங்கும்.
இந்தக் கூடுதல் திறன், பிராட்பேண்ட் மற்றும் 5G வலையமைப்புகள், கிளவுட் சேவைகள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு மையங்களின் விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் குறிப்பாக சபா மற்றும் சரவாக்கில் டிஜிட்டல் பொருளாதார வாய்ப்புகள் வலுப்பெறும்.
இறையாண்மை கொண்ட கிளவுட் உள்கட்டமைப்பு, அரசாங்க டிஜிட்டல் சேவைகள் மற்றும் இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் முக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நான்கு ஜோடி ஒளியிழை (ஃபைபர் ஆப்டிக்) கேபிள்கள் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் என்று MCMC தெரிவித்துள்ளது.
“மலேசியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் MCMC-யின் உறுதிப்பாட்டை 'சலாம்' (SALAM) பிரதிபலிக்கிறது. இதன் மூலம் அதிகமான சமூகங்களும் வணிகங்களும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பலன்களைப் பெற முடியும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் பணிகள் வரும் டிசம்பர் மாத மத்தியில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், 2030-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் கட்டம் கட்டமாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நேற்று முதல் மலேசியாவிற்கு இரு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலையில், சுல்தான் அப்துல் சமாட் கட்டடத்தில் டி.எம். (TM) மற்றும் ஏ.எஸ்.என். (ASN) நிறுவனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.








