ஷா ஆலாம், நவ 13: சிலாங்கூரில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், 2027-ஆம் ஆண்டு முழுவதும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றை வலுப்படுத்தும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தவுள்ளது.
ஒரு வளர்ந்த மாநிலம் என்ற முறையில், சிலாங்கூர் இப்போது வெறுமனே கல்வி வாய்ப்புகளை வழங்குவதோடு நின்றுவிடாமல், அதன் தரம் உலகத் தரத்தை எட்டுவதை உறுதி செய்யும் முயற்சிகளுக்கு மாற வேண்டும் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
"திறமையான ஆசிரியர்களின் துணையுடன் கூடிய உயர்தரக் கல்வியின் மூலம், உள்ளூரில் மட்டும் சாதனை படைப்பவர்களாக இல்லாமல், உலக அரங்கில் போட்டியிடும் திறன் கொண்ட சிலாங்கூர் பிள்ளைகளை நம்மால் உருவாக்க முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த இலக்கை நனவாக்கும் வகையில், சிலாங்கூர் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவளிப்பதற்காக கல்வி மேம்பாடு மற்றும் ஆசிரியர் திறன் வளர்ப்புத் திட்டத்தை மாநில அரசு வலுப்படுத்தும் என அமிருதீன் கூறினார்.
அடுத்த ஆண்டு முழுவதும் 'மாணவர் பண்புநலன் மேம்பாட்டுத் திட்டம்' மற்றும் 'விளையாட்டு மற்றும் இணைப்பாடத் திட்டச் சிறப்புத் திட்டம்' ஆகியவற்றின் மூலம் வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் முயற்சிகளும் தீவிரப்படுத்தப்படும்.
மேலும், சிலாங்கூர் மாநில அரசு முதன்முறையாக ஜப்பானுக்கு 'சிறந்த மாணவர் பரிமாற்றத் திட்டத்தை' அறிமுகப்படுத்தும்.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
"வெளியுலக மாற்றங்களை அவர்கள் நன்கு அறிந்து கொள்ளவும், மாறுபட்ட பின்னணி கொண்ட சமூகங்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு தன்னம்பிக்கையுடன் போட்டியிடவும் இந்த முயற்சி செயல்படுத்தப்படுகிறது," என்றும் அவர் கூறினார்.






