மலேசியாவுக்கு கூடுதல் STEM திறனாளிகள் தேவை: பிரதமர் அன்வார்

7 செப்டெம்பர் 2026, 3:57 AM
மலேசியாவுக்கு கூடுதல் STEM திறனாளிகள் தேவை: பிரதமர் அன்வார்

ஷா ஆலம், செப். 7: அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் அதிகமான இளம் திறனாளிகள் மலேசியாவுக்குத் தேவைப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

முன்னேறிய, போட்டித்திறன் மிக்க மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய நாட்டை உருவாக்குவதற்கு STEM திறனாளிகள் அவசியம் என அவர் கூறினார்.

பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சித் துறைகள், தொழில்துறை மற்றும் தொடக்கநிலை நிறுவனங்கள் வழியாக இளம் தலைமுறையினர் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த நாட்டின் STEM சூழலமைப்பை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார்.

தேசிய அறிவியல் சவால் (NSC) போட்டி வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கப்படுவதுடன் முடிவடையக்கூடாது. இதுபோன்ற தளங்களின் மூலம் அடையாளம் காணப்படும் திறன்கள் தொடர்ந்து வளர்க்கப்பட்டு, அவர்கள் மேலும் உயர்ந்த நிலைக்குச் செல்லும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதற்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு (MOSTI), மலேசிய அறிவியல் கழகம் (ASM), கல்வி அமைச்சு இணைந்து செயல்பட வேண்டும்.

மலேசியா எப்போதும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடாக மட்டும் இருக்க முடியாது. தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதற்கான உரிமையைப் பெற்று, அதன் மீது முழுமையான ஆளுமையை ஏற்படுத்தும் நாடாக மாற வேண்டும் என்றார் அன்வார்.

உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி விநியோகம், பொதுச் சுகாதாரம், நீர்வளப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை நாடு எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த முயற்சிகள் மேலும் முக்கியத்துவம் பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

STEM கல்வியை வலுப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு மட்டுமே உரியது இல்லை. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்துறை மற்றும் சமூகத்தினரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அன்வார் தெரிவித்தார்.

இந்த முயற்சியில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும், இளம் தலைமுறையினரிடம் அறிவியல் மீதான ஆர்வத்தையும் கேள்வி எழுப்பும் மனப்பான்மையையும் தூண்டுவதுடன், அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கும் வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.