ஷா ஆலாம், நவ 10 : கோலா சிலாங்கூர், ஜெராமில் உள்ள கம்புங் புக்கிட் கூச்சிங் மற்றும் கம்புங் புக்கிட் ஹிஜாவ் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைக்கவும், நீர் தேங்காமல் சீராகச் செல்லவும் அங்குள்ள வடிகால் அமைப்புகளை உடனடியாகத் தூய்மைப்படுத்த சிலாங்கூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம்தான் இப்பகுதிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும், வடிகால்களில் அடைப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த பராமரிப்புப் பணிகளை மீண்டும் உடனடியாகச் செய்யுமாறு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி உத்தரவிட்டார்.
மந்திரி பெசார் நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
மேலும், அங்குள்ள பாரீட் காஜா வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் (RTB) பம்ப் நிலையத்திற்குச் சென்று நீர் இறைக்கும் பணிகளையும் அவர்கள் கண்காணித்தனர்.
தற்போதைய சோதனையில் வெள்ளத் தடுப்பு அணைகள் நல்ல நிலையில் இருப்பதும், தேங்கியுள்ள நீரை விரைவாக வெளியேற்ற வினாடிக்கு 280 லிட்டர் திறன் கொண்ட நீர் இறைக்கும் பம்ப் பயன்படுத்தப்பட்டு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வடகிழக்கு பருவமழை மற்றும் கடல் அலைகளின் சீற்றம் உள்ள இந்த காலகட்டத்தில், மக்களின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், வெள்ள நீர் வடியும் வரை தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் நீடிக்கும் என்றும் மந்திரி பெசார் தெரிவித்தார்.








