ஷா ஆலாம், நவ 21- அனுமதி இல்லாமல் இயங்கி வந்த இரண்டு சட்டவிரோத தொழிற்சாலைகள் மீது கோலா சிலாங்கூர் நகராண்மை கழகத்தினர் அதிரடி சோதனை நடத்தினர்.
ஜெராம் பகுதியில் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் நேற்று முன்தினம் அதிரடியாக சோதனையை நடத்தியது.. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடந்த இந்தச் சோதனையில், MPKS-இன் 42 உறுப்பினர்களுடன், தேசிய நீர் வழங்கல் சேவை ஆணையம் (SPAN), சுற்றுச்சூழல் துறை (JAS), கோலா சிலாங்கூர் மாவட்ட மற்றும் நில அலுவலகம், ஆயர் சிலாங்கூர் மற்றும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) உள்ளிட்ட தொழில்நுட்ப முகவர்கள் பலர் இணைந்து கொண்டனர்.
இரண்டு தொழிற்சாலைகளும் முந்தைய அறிவிப்புக்குப் பணியாதது மற்றும் MPKS-இன் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் கட்டிடங்களை அமைத்தது உட்படப் பல்வேறு சட்ட மீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
1976 உள்ளூராட்சிச் சட்டத்தின் பிரிவு 109 மற்றும் 1974 சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் பிரிவு 70(1) ஆகியவற்றின் கீழ் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், MPKS சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் துறை, சுகாதாரம், கழிவுநீர் வெளியேற்றம், மற்றும் தூசு/சத்தம் சம்பந்தமான உப சட்டங்களின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொண்டது..
இந்தச் சோதனையின் போது, சுற்றுச்சூழலுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்காக சட்டம் 133 இன் பிரிவு 82(5)-இன் கீழ் அறிவிப்புகளும் வழங்கப்பட்டன. அதே நேரத்தில், JAS சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 இன் பிரிவு 31 மற்றும் 37-இன் கீழ் வான்வழி வெளியேற்றம் தொடர்பான மேலதிக விசாரணைக்கான உத்தரவை வெளியிட்டது.
கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தொழில்துறை நடவடிக்கைகள் சட்டத்திற்கு இணங்குவதையும், குடியிருப்பாளர்களின் நலனைப் பாதிக்காமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக இது போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று MPKS வலியுறுத்தியது.
ஜெராமில் இரு சட்டவிரோத தொழிற்சாலைகள் மீது சோதனை- கோல சிலாங்கூர் நகராண்மை கழகம் நடவடிக்கை
21 நவம்பர் 2025, 7:38 AM




