தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய `கழிவிலிருந்து எரிசக்தி` தயாரிக்கும் ஆலை சிலாங்கூரில் செயல்படத் தொடங்கியது

13 மே 2026, 7:52 AM
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய `கழிவிலிருந்து எரிசக்தி` தயாரிக்கும் ஆலை சிலாங்கூரில் செயல்படத் தொடங்கியது

ஷா ஆலம், மே 13 - சிலாங்கூர் மாநிலத்தின் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, 'ஜெராம் 1' கழிவிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலை (WTE), 943 நாட்கள் கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு நேற்று நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாகத் தனது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.

சிலாங்கூரில் அமைக்கப்பட்டுள்ள இத்தகைய முதல் ஆலை இது என்பதோடு, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய திறன் கொண்ட ஒரு வசதி என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனை குறித்து மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி பெருமிதத்துடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பாரம்பரியக் குப்பைக் கிடங்கு முறைகளிலிருந்து விடுபட்டு, நவீன மற்றும் நிலையான கழிவு மேலாண்மை முறையை நோக்கிச் சிலாங்கூர் மாநிலம் வெற்றிகரமாக அடியெடுத்து வைப்பதை இந்த வசதி உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆலையின் செயல்பாட்டுத் திறன் குறித்து விவரித்த அவர், நாளொன்றுக்கு 1,500 டன் கழிவுகளைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலை, அதே வேளையில் 26 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்றும் தெரிவித்தார்.

இதன் மூலம் சிலாங்கூர் வாழ் மக்களின் பயன்பாட்டிற்காகச் சுமார் 1.248 மில்லியன் கிலோவாட்-மணிநேர மின்னாற்றலை உருவாக்க முடியும் என அவர் தனது முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலப் பற்றாக்குறை போன்ற நீண்டகாலப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், இரண்டு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

மாநில அரசின் துணை நிறுவனமான வேர்ல்டுவைட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Worldwide Holdings Bhd), ஷாங்காய் எலக்ட்ரிக் பவர் ஜெனரேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்த மெகா திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இது மாநிலத்தின் பசுமைத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ளூர் நிபுணத்துவத்தின் ஆற்றலை உலகிற்கு நிரூபித்துள்ளதாக அமிருடின் ஷாரி புகழ்ந்தார்.

மேலும், சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களில் சிலாங்கூர் அரசு தீவிரம் காட்டவில்லை என்ற விமர்சனங்களுக்கு இந்த வெற்றியே ஒரு தக்க பதிலடி என்று அவர் கூறினார்.

மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் எதிர்காலச் சூழலியல் பாதுகாப்பிற்காகவும் ஆக்கப்பூர்வமான கொள்கைகளை வகுத்து, அவற்றைச் செயல்படுத்துவதில் சிலாங்கூர் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு இந்த ஆலை ஒரு சான்றாகும் என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.