ஷா ஆலாம், நவ 7 : சுங்கை காப்பார் கெச்சில் மற்றும் சுங்கை காப்பார் பெசார் வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் பணிகள் தற்போது 37 விழுக்காட்டை எட்டியதைத் தொடர்ந்து, கிள்ளான், மேருவின் சில பகுதிகளில் பெரிய அளவிலான வெள்ள பாதிப்புகள் குறைந்துள்ளன.
ஜனவரி 2024-இல் தொடங்கப்பட்டு 2029 இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் அந்த வெள்ளப் தடுப்பு திட்டம், நேர்மறையான பலன்களைக் காட்டத் தொடங்கியுள்ளதாக,
மேரு சட்டமன்ற உறுப்பினர் மரியம் அப்துல் ரஷீத் தெரிவித்தார்.

சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது மேரு நகரம் உள்ளிட்ட பல அபாயமுள்ள பகுதிகளில் பெரிய வெள்ளம் ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக ஜாலான் செம்பாகா, ஜாலான் பைப், ஜாலான் ஹம்சா அலாங், தாமான் ஸ்ரீ புத்ரி, தாமான் மெஸ்ரா, தாமான் பெர்காட் மற்றும் தாமான் மேரு முர்னி ஆகிய பகுதிகள் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களாக இருந்தன.
ஆனால் இம்முறை பொதுமக்கள் யாரும் தற்காலிக நிவாரண மையங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படவில்லை என மரியம் குறிப்பிட்டார்.
இந்த வெள்ளத் தடுப்புத் திட்டத்தில் நான்கு வெள்ளத் தடுப்பு குளங்கள் அமைப்பதும் அடங்கும்.
நீண்ட கால வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்காக ஜாலான் கெனாங்கான் மற்றும் தாமான் மேரு 3 ஆகிய பகுதிகளில் வடிகால்களை அகலப்படுத்தும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
நிலம் கையகப்படுத்துதல், முறையான ஆய்வுகள் மற்றும் வடிவமைப்பு தயாரிப்புகள் காரணமாகவே இத்திட்டம் நிறைவடைய கூடுதல் காலம் எடுப்பதாக மரியம் விளக்கினார்.
" மேலும், கம்போங் புடிமானில் உள்ள வெள்ளத் தடுப்பு குளம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கிள்ளான் அரச மாநகராட்சி மன்றம் மூலமாக தாமான் மேரு ஜெயாவில் மூன்று நீர் இறைக்கும் பம்புகள் பொருத்தப்பட்டதை அடுத்தும், அமான் பெர்டானாவில் கரை தடுப்புகள் கட்டப்பட்டதை அடுத்தும், வெள்ளம் ஏற்படுவதையும் நீர் தேங்குவதையும் குறைத்துள்ளன" என அவர் குறிப்பிட்டார்.
வடகிழக்கு பருவமழை மற்றும் பெரிய கடல் அலை நிகழ்வுகளை எதிர்கொள்வதற்காக, சிலாங்கூர் JPS- நீர்ப்பாட்சன வடிகால் துறை, JKR - பொதுப் பணித் துறை மற்றும் கிள்ளான் அரச மாநகராட்சி மன்றம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு வடிகால்களைப் பராமரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
தாமான் டத்தோ பண்டார் மற்றும் ஃபேரி பார்க் எல்லைப் பகுதிகளில் சில இடங்களில் இன்னும் நீர் பெருக்கெடுத்து ஓடினாலும், அவை மக்களின் வீடுகளுக்குள் புகவில்லை. அவசரக் கால இடமாற்றங்கள் தேவைப்பட்டால், பின்ஜாய் தேசியப் பள்ளி (SK Binjai) தற்காலிக நிவாரண மையமாகச் செயல்பட தயாராக வைக்கப்பட்டுள்ளது என்றாரவர்.
வடிகால் அமைப்பு மேம்பட்டிருந்தாலும், வழக்கத்திற்கு மாறான பலத்த மழை மற்றும் கடல் அலைகளால் வெள்ளம் ஏற்படலாம் என்பதால் மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மரியம் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்கள் தங்களது வாகனங்களை உயரமான இடங்களுக்கு மாற்றவும், முக்கிய ஆவணங்கள் மற்றும் மதிப்புள்ள பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்தொடரவும் அவர் அறிவுறுத்தினார்.







