ஷா ஆலாம், நவ.8: சிறுவயதில் ஏற்பட்ட ஒரு சிறிய கலை ஆர்வம், இன்று நூற்றுக்கணக்கான கோலங்களை உருவாக்கிய அனுபவமாகவும், மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த பெருமையாகவும் வளர்ந்துள்ளது. ராவாங்கைச் சேர்ந்த 36 வயதான கோலக் கலைஞர் சிவபாலன் ஆறுமுகத்தின் பயணம் அத்தகையதொரு வண்ணமயமான கலைப்பயணமாக அமைந்துள்ளது.
தனது 10 வயதிலேயே கோலங்கள் வரைவதில் ஆர்வம் கொண்ட சிவபாலன், அன்றிலிருந்து இன்று வரை இந்தக் கலையையே தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகக் கொண்டு பயணித்து வருகிறார். முறையான பயிற்சி எதுவுமின்றி சுயமாகக் கோலக் கலையைக் கற்றுக்கொண்ட இவருக்கு, ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்த தந்தையும் ஒரு முக்கியத் தூண்டுதலாக இருந்துள்ளார்.

பள்ளிப் பருவத்தில்கூட படிப்பைவிட ஓவியங்களிலும் கோல வடிவமைப்புகளிலும் அதிக ஆர்வம் காட்டிய இவர், தேர்வுகளின்போது விடைத்தாள்களில்கூட கோலங்களை வரைந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
கடந்த 18 ஆண்டுகளாகத் தனது கலைத்திறனை வளர்த்து வரும் சிவபாலன், தீபாவளியை முன்னிட்டு மட்டும் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட கோலங்களை உருவாக்கியுள்ளார். இதுதவிர திருமணங்கள், தனியார் நிகழ்ச்சிகள், வணிக வளாகங்கள் மற்றும் கார் விற்பனைக் காட்சியகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இவரது கலைப்படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
லைஃப் கிரியேஷன் ஈவென்ட் பிளானர் (Life Creation Event Planner) மற்றும் லைஃப் கிரியேஷன் ரங்கோலி கோலம் (Life Creation Rangoli Kolam) ஆகியவற்றின் நிறுவனரான சிவபாலனுக்கு, தீபாவளிக் காலம் மிகவும் பரபரப்பான காலமாகும்.
பண்டிகை தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே கோல வடிவமைப்புகளைத் திட்டமிடத் தொடங்கிவிடும் இவர், ஆண்டுதோறும் சுமார் 60 கோலங்களை வடிவமைத்து, அவற்றில் பலவற்றை முன்கூட்டியே உருவாக்கி வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்து வருகிறார்.

வண்ணங்கள் மீதான அவரது தீராத காதலே இந்தக் கலையில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான முக்கியக் காரணமாக உள்ளது. ஒவ்வொரு கோலத்திலும் வண்ணங்களின் பொருத்தம், வடிவமைப்பின் நேர்த்தி மற்றும் தனித்துவம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இதற்கிடையில், கோலங்களை உருவாக்கும்போது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் சிவபாலன் தெரிவித்தார்.
குறிப்பாக, ஒரு கோலத்தை முழுமையாக உருவாக்கி முடித்த பிறகு அதன் நடுப்பகுதியில் வண்ணங்கள் சிதறுவது அல்லது வடிவமைப்பு கலைந்துவிடுவது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், அதனைச் சரிசெய்வது மிகவும் சிரமமான பணியாகும். ஏற்கெனவே உருவாக்கப்பட்ட பகுதிகள் பாதிக்கப்படாமல், கோலத்தின் அழகும் நேர்த்தியும் குறையாமல் அந்தப் பிழைகளைச் சரிசெய்வதற்கு அதிக பொறுமையும் அனுபவமும் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தனது கலைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக, ஒரே கோலத்தில் அதிக வண்ணங்களைப் பயன்படுத்தியதற்காக 2024-ஆம் ஆண்டு மலேசிய சாதனைப் புத்தகத்தில் (Malaysia Book of Records) சிவபாலன் இடம்பிடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு கோலாலம்பூர் NU Sentral வணிக வளாகத்தில் 20 x 25 அடி பரப்பளவில் 100 வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டு அவர் உருவாக்கிய பிரம்மாண்டமான கோலம் இந்தச் சாதனையைப் பெற்றுத் தந்துள்ளது.
சுமார் 150 கிலோகிராம் வண்ண அரிசியைப் பயன்படுத்தி இரண்டு நாட்கள் செலவிட்டு உருவாக்கப்பட்ட இந்தக் கோலத்தில் இரண்டு மயில்கள், பிரம்மாண்டமான களிமண் அகல்விளக்கு மற்றும் பல்வேறு பாரம்பரிய கோல வடிவங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தக் கலைப்படைப்பின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கப் பணிகளை சிவபாலன் தனி ஒருவராகவே மேற்கொண்டார்.

எனினும், வண்ணங்களைத் தயாரித்துக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளில் அவரது குழுவினர் உறுதுணையாக இருந்துள்ளனர். பல ஆண்டுகளாக மனதில் வைத்திருந்த தனது கனவை நனவாக்கிய இந்த முயற்சி, அவரது கலைப்பயணத்தில் மறக்க முடியாத சாதனையாக அமைந்துள்ளது.
கோலங்களை உருவாக்குவதில் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் சிவபாலன் கவனம் செலுத்தி வருகிறார். தனது படைப்புகளுக்கு உணவுப் பாதுகாப்புக்கு ஏற்ற சாயங்களையே பயன்படுத்தும் இவர், தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்களைத் தவிர்த்து வருகிறார். மேலும், கோலங்கள் அகற்றப்பட்ட பின்னர் பயன்படுத்தப்பட்ட அரிசி வீணாக்கப்படாமல் ராவாங்கில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது.

இதற்கிடையில், இளைய தலைமுறையினரிடையே பாரம்பரியக் கோலக் கலையின் மீதான ஆர்வம் குறைந்து வருவது அவருக்கு கவலையளிக்கிறது. பலர் முன்தயாரிக்கப்பட்ட கோல வடிவமைப்புகளைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினாலும், சொந்தமாக ஒரு கோலத்தை உருவாக்குவதில் தயக்கம் காட்டுவதாக அவர் கருதுகிறார்.
கோலக் கலை ஒரு நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாகவும் அமைய முடியும் எனக் குறிப்பிடும் சிவபாலன், குறிப்பாக தீபாவளிக் காலத்தில் இதற்கான தேவை அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார். இருப்பினும், இந்தத் தொழில் ஆண்டு முழுவதும் ஒரே அளவிலான வருமானத்தைத் தருவதில்லை என்றும், பெரும்பாலும் தீபாவளிக் காலத்தில்தான் அதிகமான வாய்ப்புகளும் வருமானமும் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
முறையாகக் கோலக் கலையைக் கற்றுக்கொண்டு, அதில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபட்டால் இது சிறந்த தொழிலாக அமையும் என்பதும் அவரது கருத்தாகும்.

மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள சிவபாலனின் கனவு இதோடு நின்றுவிடவில்லை. அடுத்ததாக, 1,000 வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தி ஒரு பிரம்மாண்டமான கோலத்தை உருவாக்கி கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி அவர் பயணித்து வருகிறார்.









