ஷா ஆலாம், நவ.6 – சிலாங்கூர், சபாக் பெர்ணாமில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றுடன் கூடிய புயல் மற்றும் கனமழையால் பொதுமக்களின் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, சில வீடுகளின் கூரைகள் பலத்த காற்றினால் பறந்தன.
பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையை நேரில் கண்டறிய சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் சம்பவ இடங்களுக்குச் சென்று சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக மாவட்ட அதிகாரியுடனும் அவர் கலந்துரையாடினார்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகள் விரைவாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே முக்கிய நோக்கம் என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான தங்குமிடம் தேவைப்படும் மக்களுக்காக, சுங்கை பெசாரில் உள்ள டேவான் செரி பெர்ணாமில் தற்காலிக நிவாரண மையம் (PPS) திறக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.






