ஷா ஆலாம், நவ 5: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட 150 ரிங்கிட் பெருமானமுள்ள இ-வவுச்சர் (e-voucher) நிதியுதவி, குறிப்பாக வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துள்ள இக்காலக்கட்டத்தில், குறைந்த வருமானம் பெறும் பிரிவினரின் பண்டிகை காலப் பொருள் வாங்கும் சுமையைக் குறைக்கப் பெரிதும் உதவியுள்ளது.
அந்த உதவியைப் பெற்றுக் கொண்டவர்களில் ஒருவரான எம். மோஹிதா, தனது குடும்பத்தின் முதன்மை வருமான ஆதாரமாகத் தான் விளங்குவதால் இந்த உதவி தமக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்றார்.

"தீபாவளிக்காக நான் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வைத்திருந்தேன். இந்த உதவி சமையலறைப் பொருட்களை வாங்குவதற்கான எனது சுமையைக் குறைத்துள்ளது," என்று அவர் கூறினார்.
"வவுச்சர் வடிவில் உதவி வழங்குவது மிகவும் நடைமுறைக்கு உகந்ததாக உள்ளது. ஏனெனில், பயன்படுத்தப்படாமல் போகக்கூடிய பொருட்களாகப் பெறுவதை விட, குடும்பத் தேவைக்கேற்ப பொருட்களைப் பயனாளிகள் தங்களின் விருப்பப்படி தேர்ந்தெடுக்க இது சுதந்திரம் அளிக்கிறது.
"ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணவு மற்றும் சமையலறைப் பொருட்களின் தேவைகள் வெவ்வேறாக இருப்பதால், இந்த இ-வவுச்சர் முறை வீணாவதைத் தடுக்கிறது," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று இங்குள்ள புக்கிட் திங்கி லோட்டஸ் பேரங்காடியில் (Lotus's Bukit Tinggi) நடைபெற்ற 'KPS நிறுவனத்தின் தீபாவளி அன்பளிப்பை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் மூலம், கும்புலான் பெராங்சாங் சிலாங்கூர் பெர்ஹாட் (KPS Berhad), கோபரக்கா (GoBarakah) செயலி வழியாக இந்திய,சீன, மலாய் சமூகங்களைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு மொத்தம் 22,500 ரிங்கிட் மதிப்புள்ள இ-வவுச்சர்களை வழங்கியது.

மற்றொருவரான ஆர். ரேணுகா , குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட பெரிய குடும்பங்களுக்குத் தீபாவளி கொண்டாடுவதற்கான செலவு சவாலாக உள்ள நிலையில், இந்த உதவி மிகவும் பாராட்டத்தக்கது என்றார்.

"தற்போதைய பொருளாதாரச் சூழல் சற்று கடினமாக உள்ளது, குறிப்பாக ஏழு பிள்ளைகளைக் கொண்ட என்னைப் போன்ற B40 குடும்பங்களுக்கு இது பெரிய விஷயம். இந்த 150 ரிங்கிட் கிடைத்ததே பெரிய நிம்மதி, இது எங்களது செலவினங்களைக் குறைக்க ஓரளவுக்கு உதவியுள்ளது," என்றார்.
இதற்கிடையில், இல்லத்தரசியான ஹைரியா ரம்லி , வவுச்சர்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயனாளிகள் தங்களுக்கு உண்மையிலேயே தேவையான பொருட்களை வாங்க முடிகிறது, இதன் மூலம் வீணாவதைத் தவிர்க்கலாம் என்றார்.

"சில நேரங்களில் நாம் முன்பு பெற்ற பொருட்கள் காலாவதியாகும் வரை பயன்படுத்தப்படாமல் போய்விடுகின்றன. வவுச்சராகக் கொடுக்கும்போது, குடும்பத்திற்கு ஏற்ற பொருட்களை நாம் வாங்கிக் கொள்ள முடிகிறது," என்று அவர் கூறினார்.







