பூச்சோங், அக் 25: சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கும் 200 ரிங்கிட் தீபாவளிக்கான ‘ஜோம் ஷாப்பிங்’ பற்றுச் சீட்டுகள், ஓய்வூ பெற்றவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் தங்களின் சொந்த சேமிப்புப் பணத்தைச் செலவழிக்காமல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடப் பெரிதும் உதவுகின்றது.
" முன்பெல்லாம் அன்றாட மற்றும் பண்டிகைச் செலவுகளுக்குத் தனது இபிஎஃப் சேமிப்புப் பணத்தையே நம்பியிருக்க வேண்டியிருந்தது என்றும், தற்போது இந்த 200 ரிங்கிட் பற்றுச் சீட்டு கிடைத்ததால் தனது ஓய்வூதியச் சேமிப்பை பயன்படுத்தாமல் அரிசி, சர்க்கரை போன்ற வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடிகிறது" என்று ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான 61 வயது எம். ஜெயந்தி தெரிவித்தார்.
அதேபோல, தற்போது வேலை இல்லாமல் இருக்கும் 55 வயது தனித்து வாழும் தாயான எஸ்.சரஸ்வதி, படிக்கும் பிள்ளையையும் வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவது சவாலாக இருக்கும் வேளையில் இந்த வவுச்சர் தமக்குக் கிடைத்த பெரிய நிதி நிவாரணம் என்று குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டும் இந்த உதவியைப் பெற்றதாகக் கூறிய அவர், எங்களைப் போன்ற வசதி இல்லாத குடும்பங்களுக்கு இந்த உதவி தொடர்ந்து கிடைக்க வேண்டும் என சிலாங்கூர் அரசுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதனிடையே, தீபாவளிப் பொருட்கள் வாங்குவதற்காக வேலைக்கு விடுப்பு எடுத்து, இந்த வவுச்சரைப் பெற்றுக்கொண்டதாக 61 வயது டெக்சி ஓட்டுநரான எஸ். கிருஷ்ணன் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் வாழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், பண்டிகை காலத்திற்கு முன்பாகவே அத்தியாவசியப் பொருட்களை வாங்க அரசாங்கம் பலதரப்பட்ட உதவிகளை வழங்குவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நேற்று, கின்ராரா மாநில சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹானிடமிருந்து தீபாவளி பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டப் பின்னர், மக்கள் தங்களின் நெகிழ்ச்சியான கருத்துகளை மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக, சிலாங்கூர் மனிதவள - வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு , இவ்வாண்டு மாநிலம் முழுவதும் தகுதியுடையவர்களுக்கு 26,354 தீபாவளி பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்படுமென தெரிவித்தார்.

இத்திட்டத்திற்காக சிலாங்கூர் அரசாங்கம் 5.27 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
வழக்கம்போல, அந்தந்த சட்டமன்றத் தொகுதி அலுவலகங்கள் மூலம் இந்த வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் , மக்கள் பண்டிகைப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.







