கோலாலம்பூர், நவ 5 : மாசுபட்ட RON95 பெட்ரோல் காரணமாக வாகன இயந்திரங்கள் சேதமடைந்தது தொடர்பில், செவ்ரான் (கால்டெக்ஸ் பிராண்ட் உரிமையாளர்) மற்றும் பெட்ரோன் ஆகிய இரு எரிபொருள் நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தொடங்கியுள்ளன.
தங்களின் தவறு அல்லது பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்கும் முன்னரே, தற்காலிக நிவாரணமாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது என்று உள்நாட்டு வாணிக வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முறையான ஆவணங்களுடன் முழுமையான புகாரைச் சமர்ப்பித்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த இழப்பீடு தொகை கிடைக்கும்.
இந்த விவகாரம் குறித்து வேதியியல் துறை (Jabatan Kimia) நடத்திய முதற்கட்ட சோதனையில், சேகரிக்கப்பட்ட 43 பெட்ரோல் மாதிரிகளில் தண்ணீர் கலப்பு எதுவும் கண்டறியப்படவில்லை.
அக்டோபர் 3 முதல், 8 மாநிலங்களிலும் 3 எண்ணெய் கிடங்குகளிலும் இருந்து மொத்தம் 262 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
மீதமுள்ள மாதிரிகளின் முடிவுகள் இன்னும் ஆய்வில் உள்ளன.
இந்த பாதிப்பு ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியையும் பாதிக்கவில்லை என்றும், குறிப்பிட்ட காலப்பகுதியில் கெடா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சில எரிபொருள் நிலையங்களில் மட்டுமே இந்தச் சிக்கல் ஏற்பட்டதாகவும் அமைச்சர் விளக்கினார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க சிங்கப்பூர், பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் தரக்கட்டுப்பாட்டு முறைகளை மலேசியா ஒப்பிட்டு ஆராய்ந்து வருகிறது.
மேலும், எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் இழப்பீட்டுத் தொகையில் திருப்தி அடையாத வாகன உரிமையாளர்கள், உள்நாட்டு வாணிக அமைச்சிடம் (KPDN) புகார் அளிக்கலாம் அல்லது மலேசிய பயனீட்டாளர் இழப்பீடு கோரிக்கை நடுவர் மன்றத்திலும்(TTPM) முறையிடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







