ஷா ஆலாம், நவ 3 : 2026 -ஆம் ஆண்டு எஸ்பிஎம் (SPM) ஆங்கில வாய்மொழித் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளைத் தேர்வு வாரியம் மறுத்திருக்கிறது.
இணையத்தில் பரவி வரும் தகவல்கள், பாடத்திட்டக் கையேட்டின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்ட பொதுவான கருப்பொருள்கள் மற்றும் யூகங்கள் மட்டுமே என்று தேர்வு வாரியம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியது.
தேர்வு வினாத்தாளில் உள்ள சில வார்த்தைகளோ தலைப்புகளோ இந்த யூகங்களுடன் ஒத்துப்போவதால் மட்டுமே வினாத்தாள் கசிந்துவிட்டது என்று கூற முடியாது;
ஒரு பொதுவான தலைப்பை வைத்து பல்வேறு வடிவங்களில் கேள்விகளையும் சூழல்களையும் உருவாக்க முடியும் என்றும் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தேர்வுக்கான வினாத்தாள்களைத் தயாரிப்பதும் அதனைத் கையாளுவதும் 1972-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ், கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியே செய்யப்படுகிறது என்று தேர்வு வாரியம் வலியுறுத்தியது.
எனவே, பொதுமக்கள் இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், 2026 எஸ்பிஎம் தேர்வெழுதும் மாணவர்கள் எவ்வித பதற்றமும் இன்றி அமைதியாகத் தேர்வில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான முறையில் தேர்வு நடப்பதை உறுதி செய்ய, இந்தத் தேர்வின் பாதுகாப்பு மற்றும் நேர்மைத் தன்மையைப் பேணுவதில் தேர்வு வாரியம் என்றும் உறுதியாக இருக்கும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





