உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக 10,000-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் காத்திருப்பு

3 நவம்பர் 2026, 4:55 AM
உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக 10,000-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் காத்திருப்பு

கோலாலம்பூர், நவ.3 – மலேசியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதுவரை 10,036 நோயாளிகள் காத்திருக்கின்றனர்.

இறந்தவர்களிடமிருந்து உறுப்பு தானம் பெறும் விகிதம் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு வெறும் 1.33 நன்கொடையாளர்கள் என்ற குறைந்த அளவிலேயே இருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“ஆயிரக்கணக்கான நோயாளிகள் காலவரையின்றி காத்திருக்கும் நிலையைத் தொடர அனுமதிக்க முடியாது. ஒவ்வொரு துறையும் தனித்தனியாகச் செயல்படும் அணுகுமுறையைக் கைவிட்டு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேசிய உடல் உறுப்பு மாற்று மன்றத்தின் (Majlis Transplantasi Kebangsaan – MTK) முதலாவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய டாக்டர் சுல்கிப்ளி, நாட்டின் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை முறைகளில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே இம்மன்றத்தின் முக்கியப் பொறுப்பு என்றார்.

குறிப்பாக, உறுப்புகளைக் கொண்டு செல்வதற்கான அவசரகால விமானப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது முக்கிய முன்னுரிமையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தீயணைப்பு மற்றும் மீட்புப் படைத் துறை, தற்காப்பு அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து Mercy Flight சேவையை ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, தானமாகப் பெறப்படும் உறுப்புகள் மருத்துவமனைகளுக்கு விரைவாகச் சென்றடைவதை உறுதிப்படுத்த, மலேசியக் காவல்துறையின் (PDRM) உதவியுடன் காவல்துறை வாகன வசதிகளையும் ஏற்படுத்த அரசு எண்ணம் கொண்டுள்ளது.

உறுப்புகளைக் கொண்டு செல்லும்போது ஏற்படக்கூடிய போக்குவரத்துத் தாமதங்களைக் குறைத்து, அவை உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை நடைபெறும் மருத்துவமனைகளைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இதற்கிடையில், உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளவர்களின் உறுதிமொழி விவரங்களை அவர்களது வாகன ஓட்டுநர் உரிமத்தில் இணைப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

மேலும், இத்திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த நிதி அமைச்சின் ஒத்துழைப்பும் பெறப்படும். அதேவேளையில், உறுப்பு தானம் தொடர்பான மத ரீதியிலான வழிகாட்டுதல்களைத் தெளிவுபடுத்த மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான ஜாகிம் (JAKIM) அமைப்புடனும் இணைந்து செயல்படப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் 1974ஆம் ஆண்டின் மனித திசுக்கள் சட்டம் (Human Tissues Act 1974) மற்றும் சம்பந்தப்பட்ட மத ஃபத்வா வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு நடைபெறுவது உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம், உறுப்பு தானம் செய்ய முன்வந்தவர்களின் இறுதி விருப்பங்களுக்கு மதிப்பளிப்பதுடன், அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளும் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்படும்.

பொதுமக்களிடையே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், சுகாதார அமைச்சு ‘Warisku, Hormati Ikrarku’ என்ற பிரச்சாரத்தையும் தொடர்ந்து தீவிரப்படுத்தவுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.