ஷா ஆலாம், அக்.31 - சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்டம் புதிய தேதியில் எதிர்வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கு முன் நவம்பர் 6 -ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்த அந்த தீபாவளி கொண்டாட்டம் புதிய தேதிக்கு மாற்றப்பட்டிருப்பதாக மனிதவளத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பராய்டுவின் அலுவலகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொண்டது.
கிள்ளான் சதுக்கம், பாடாங் செட்டி திடலில் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் அந்நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஒற்றுமையின் ஒளி, வளமான சிலாங்கூர்’ (Cahaya Perpaduan, Selangor Sejahtera) என்ற கருப்பொருளில் அக்கொண்டாட்டம், இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.
அந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உள்ளிட்ட மாநிலத் தலைவர்களும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







