கம்பார், நவ.15: பேராக் மாநிலத்தில் 50 ஆண்டு காலமாக இருந்த பிரச்சினைகளை கண்டறிந்து அவைகளுக்கு தீர்வு கண்டு வருகிறோம். அதே வேளையில் எங்களுடைய செயல் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களில் வெளியிட்டு வருகிறோம்.
ஆகவே, சம்பந்தப்பட்டவர்கள் ஊடகங்களில் வரும் செய்தியை படித்து எங்களின் மக்கள் சேவையை அறிந்துக் கொள்ளுமாறு இங்குள்ள மாலிம் நவார் சட்டமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொண்டபோது பேராக் இந்திய சமூக நலத்துறை, சுகாதாரம், மனித வளம் மற்றும் ஒற்றுமை துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் கூறினார்.
கடந்த 1984 ம் ஆண்டில் மாலிம் நாவார் சட்டமன்ற தொகுதி உருவானது. இதுவரை இத்தொகுதியில் எந்த ஒரு இந்தியரும் போட்டியிட்டதில்லை. ஆனால், முதல் முறையாக இந்திய பெண்மணியான பவானி வீரையா( ஷா ஷா) வெற்றிப்பெற்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார். பேராக்கில் மூன்று இந்திய பெண்மணிகள் தேர்தலில் வெற்றி பெற்றது பெருமையாக உள்ளது.
அவர்களில் புந்தோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம.துளசி மற்றும் ஊத்தான் மெலிந்தாங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சி.வசந்தி ஆகியோரை அவர் பாராட்டினார்.பேராக் மாநிலத்தில் பல்லாண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வந்த இந்தியர்களுக்கு அரசாங்கம் வாயிலாக நிலப்பட்டா வழங்கி வருகிறோம்.
தற்போது புறம்போக்கு வீட்டுமனை பிரச்சனை பேராக் வாழ் இந்தியர்கள் எதிர் நோக்குவதில்லை. அத்துடன், ஆலய நில பிரச்சினைகளும் கட்டம் கட்டமாக தீர்வு கண்டு வருகிறது. இதனையெல்லாம் பட்டியலிட்டு ஊடகங்களில் வெளியிட்டு வருகிறோம்.
அவைகளை படித்து தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.முந்தைய ஆட்சியில் பதவியில் இருந்தவர்கள் இந்திய மக்களின் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காண- வில்லை. அவர்கள் காலத்தில் பொதுமக்கள் வழங்கிய பிரச்சினைகள் அடங்கிய கோப்புகள் இன்னமும் திறக்கப்படவில்லை. அவை அனைத்தும் அப்பளம் போல உடைந்துவிடும் நிலைப்பாட்டில் உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் என்னுடன் கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவு எடுக்க முடியும். குறிப்பாக, பேராக்கில் என் அனுமதியின்றி எந்த ஒரு ஆலயமும் உடைபடாது. எந்த ஒரு இந்தியர் பிரச்சினையும் என் பார்வைக்கு கொண்டு வந்து பின் முடிவு எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கம்பார் வட்டார இந்திய இயக்கத்தினர் டத்தோ அ.சிவநேசனுக்கு " டத்தோ" விருது கிடைத்தமைக்கு பொன்னாடை மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். வருகையாளர்கள் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்யப்பட்டது






