புத்ராஜெயா, அக்.30 – அகதிகள் பதிவு ஆவணத் திட்டம் (DPP), மலேசியாவில் அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கோ, நிரந்தரக் குடியிருப்பு அந்தஸ்தைப் (PR) பெறுவதற்கோ அல்லது மலேசியக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கோ வழிவகுக்கும் திட்டம் அல்ல என உள்துறை அமைச்சு (KDN) தெளிவுபடுத்தியது.
சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டு, அகதிகளுக்கான இறுதித் தீர்வு காணப்படும் வரை அவர்களின் இருப்பை முறையாக நிர்வகிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புதிய அகதிகள் மலேசியாவிற்குள் நுழைவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதற்கான தகுதி வரம்பாக 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை அரசு நிர்ணயித்துள்ளதாக அமைச்சு கூறியது.
2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்னதாகவே மலேசியாவில் இருந்தவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதற்குப் பரிசீலிக்கப்படுவர். அதற்குப் பின்னர் நாட்டிற்குள் நுழைந்த அகதிகள் இத்திட்டத்தின் கீழ் தகுதி பெறமாட்டார்கள்.
அதேபோன்று, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் (UNHCR) அடையாள அட்டை அல்லது கடிதத்தை வைத்திருப்பது மட்டும் DPP திட்டத்தில் தானாகவே தகுதி பெறுவதற்கான உத்தரவாதம் அளிக்காது.
அகதிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவது மற்றும் மூன்றாவது நாடுகளில் மறுகுடியேற்றம் செய்வது ஆகிய முயற்சிகளை அரசு தொடர்ந்து முன்னெடுக்கும்.
இதற்கிடையில், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை செய்வதற்கான அனுமதி தற்காலிகமானது மற்றும் வரையறுக்கப்பட்டது. மேலும், அது அரசின் நிபந்தனைகள் மற்றும் ஒப்புதலுக்கு உட்பட்டதாக இருக்கும்.
நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நபர்களுக்கு மட்டுமே அரசாங்கத்தின் ஒப்புதலுடன் குறிப்பிட்ட துறைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வேலைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
குறிப்பாக, உள்ளூர் தொழிலாளர்கள் அதிகம் ஈடுபட விரும்பாத, கடினமான பணிகள் என வகைப்படுத்தப்படும் 3D வேலைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் துறைகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு விளக்கியது.
இருப்பினும், வேலைவாய்ப்பில் மலேசியக் குடிமக்களுக்கே தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சு உறுதியளித்துள்ளது.







