கோலாலம்பூர், அக்.30 – நாட்டில் வாழ்க்கைச் செலவு தொடர்ந்து மக்களுக்குப் பெரும் சுமையாக இருந்து வரும் நிலையில், விற்பனை மற்றும் சேவை வரி (SST) முறையைத் தொடர அரசு முடிவு செய்துள்ளது.
பொருள் மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி (GST) மீண்டும் அமல்படுத்தப்படுவது தற்போதைக்கு அரசின் பரிசீலனையில் இல்லை என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
அதேவேளையில், தற்போதைய எஸ்எஸ்டி வரி முறையில் மேலும் பல மேம்பாடுகளை மேற்கொள்ள அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக, இரட்டை வரி விதிப்பினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பது, வர்த்தகத் துறையினரின் செயல்பாட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் வரி செலுத்துதல் தொடர்பான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் கூறினார்.
ஜிஎஸ்டி வரி முறை பிற்போக்குத்தனமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது எனக் குறிப்பிட்ட அமிர் ஹம்சா, குறைந்த வருமானம் பெறும் மக்களே இத்தகைய வரி முறையால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தங்களது வருமானத்தில் பெரும் பகுதியை அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்காகச் செலவிட வேண்டியுள்ளது. அதனால், ஒரே அளவிலான வரி விதிக்கப்பட்டாலும், அவர்களின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் வரிச்சுமை அதிகமாக இருக்கும் என்றார் அமைச்சர்.
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சு தொடர்பான 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மசோதாவின் கொள்கை நிலை விவாதத்திற்குப் பதிலளிக்க உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டியுடன் ஒப்பிடுகையில், எஸ்எஸ்டி வரி முறையில் அரசாங்கத்திற்கு அதிக நெகிழ்வுத்தன்மை இருப்பதாகவும், மக்களின் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இலக்கிடப்பட்ட வரி விதிப்பை மேற்கொள்ள முடியும் என்றும் அமிர் ஹம்சா விளக்கினார்.

அதாவது, எந்தெந்தப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்க வேண்டும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்க முடிவதுடன், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான அடிப்படைப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கவும் முடியும் என்றார்.
இதற்கிடையில், 2027-ஆம் ஆண்டுக்கான நிதி ஆய்வறிக்கையின்படி, எஸ்எஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
2025-ஆம் ஆண்டில் 55.9 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த எஸ்எஸ்டி வருவாய், 2026-ஆம் ஆண்டில் 67 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2027-ஆம் ஆண்டில் இந்த வருவாய் 73.3 பில்லியன் ரிங்கிட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது எஸ்எஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மூன்று விழுக்காடாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமிர் ஹம்சா, இது 2017-ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி மூலம் பெறப்பட்ட வருவாய் அளவிற்குச் சமமானது என்றும் தெரிவித்தார்.
மேலும், இரு வரி முறைகளுக்கும் இடையே கணிசமான வேறுபாடு இருப்பதாக அமிர் ஹம்சா தெரிவித்தார்.

2018-ஆம் ஆண்டில் ஜிஎஸ்டியின் கீழ் ஏறக்குறைய ஏழு லட்சம் வர்த்தக நிறுவனங்கள் பதிவு செய்திருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் எஸ்எஸ்டியின் கீழ் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில், ஜிஎஸ்டி மீண்டும் அமல்படுத்தப்பட்டால் அதிக எண்ணிக்கையிலான வர்த்தக நிறுவனங்கள் வரி இணக்க நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். இதனால் அவற்றுக்கான நிர்வாக மற்றும் இணக்கச் செலவுகளும் அதிகரிக்கக்கூடும்.
எனவே, தற்போதைய சூழலில் எஸ்எஸ்டி முறையைத் தொடர்ந்து மேம்படுத்தி, மக்களுக்கும் வர்த்தகத் துறையினருக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் அணுகுமுறையையே அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அமிர் ஹம்சா தெரிவித்தார்.







