கோலாலம்பூர், டிச 10 - தற்போதுள்ள விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்.எஸ்.டி) நிலைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், பயனுள்ள வரிவிதிப்பு முறையை உறுதி செய்வதற்காக மேம்பாடுகள் செயல்படுத்தப்படும் என நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
அதேவேளையில், அடிப்படை பொருட்கள் மற்றும் சேவை மீது இந்த வரி விதிக்கப்படாது என்பதால் இந்நடவடிக்கை பயனீட்டாளர்களின் வரிகளைப் பராமரிப்பதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறையாகும் என்றார்.
எஸ்.எஸ்.டி, மலேசியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வரிவிதிப்பு முறையாகும். இது தொழில்துறை, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களால் புரிந்து கொள்ளப்பட்ட ஓர் அமைப்பு என்றும் லிம் ஹுய் விளக்கினார்.
"எஸ்.எஸ்.டி வரியைச் செயல்படுத்துவது அரசாங்கத்திற்கு விரைவான நிதி தாக்கத்தையும் அளிக்கும்," என்றார் அவர்.
நாட்டின் வரிவிதிப்பு முறை நிலையாக இருப்பதை உறுதி செய்வதற்கு, பொருள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) மீண்டும் அமல்படுத்துவது அல்லது எஸ்.எஸ்.டி வரி முறையை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து செனட்டர் டத்தோ சி. சிவராஜ் எழுப்பிய கேள்விக்கு லிம் இவ்வாறு பதிலளித்தார்.
பெரும்பாலான மக்களின் வருமானம் இன்னும் குறைவாக இருப்பதனால் (ஜி.எஸ்.டி) வரியை அமல்படுத்த அரசாங்கம் இன்னும் திட்டமிடவில்லை என்றும் அவர் விளக்கினார்.
--பெர்னாமா


