கோலாலம்பூர், அக்.29 — நாட்டில் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் சிறுவர்கள் மீதான உடல் ரீதியான, பாலியல் மற்றும் உணர்வு ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பாக மொத்தம் 3,581 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சமூக நலத்துறை (JKM) தெரிவித்தது.
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (KPWKM) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 1,522 சிறுவர் துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 2,059-ஆக அதிகரித்துள்ளது.
சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படும் சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களையும், அவற்றில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை பற்றியும் ஜெராய் நாடாளுமன்ற உறுப்பினர் சப்ரி அஸிட் எழுப்பிய கேள்விக்கு வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சு இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் சிறுவர்களைப் புறக்கணித்தல் மற்றும் அவர்களைப் பராமரிப்பதில் அலட்சியம் காட்டுதல் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 2,279-ஆகப் பதிவாகியுள்ளது.
மேலும், சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் தொடர்பாக ஜூன் 2026 வரை மலேசியக் காவல்துறை (PDRM) மொத்தம் 867 விசாரணைக் கோப்புகளைத் திறந்துள்ளதாகவும், அவற்றில் 267 வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு குறிப்பிட்டது.

சிறுவர் சட்டம் 2001 (சட்டம் 611) இன் விதிகளுக்கு கீழ் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெளிவுப்படுத்தியது.
துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்களை மீட்டல், அவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான ஆதரவை வழங்குதல் ஆகியவற்றை சமூக நலத்துறை தனது முக்கியப் பொறுப்புகளாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் அமைச்சு கூறியது
அத்துடன், சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், 2023ஆம் ஆண்டு முதல் ‘காசிஹ் கனாக்-கனாக்’ (KASIH Kanak-Kanak) எனும் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை, நாடு முழுவதும் 220 பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிறுவர்கள் மீதான துன்புறுத்தல், புறக்கணிப்பு அல்லது பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படும் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் ‘காசிஹ்’ உதவி எண்ணான 15999 அல்லது வாட்ஸ்அப் எண் 019-2615999 வாயிலாகப் புகார் அளிக்க அமைச்சு வலியுறுத்தியுள்ளது.







