கோலாலம்பூர், அக். 5 — இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட புகார்களில் சிலாங்கூர் மாநிலம் அதிகபட்சமாக 4,041 புகார்களுடன் முதலிடத்தில் உள்ளது.
ஜோகூர் 2,104 புகார்களுடன் இரண்டாவது இடத்திலும், பேராக் (1,034), பினாங்கு (977), கோலாலம்பூர் 894 புகார்களுடனும் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் துறையின் அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் அஹ்மட் சைஃபுல் சாலிஹின் தெரிவித்தார்.
இந்த ஒன்பது மாத காலகட்டத்தில் நாடு முழுவதும் மொத்தம் 13,296 சுற்றுச்சூழல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஒன்பது மாதங்களில் பெறப்பட்ட புகார்களில் காற்று மாசுபாடு தொடர்பான புகார்களே அதிகமாக உள்ளன. மொத்தம் 11,301 புகார்கள் அல்லது 84.3 விழுக்காடு புகார்கள் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவை ஆகும்.

அதில் திறந்தவெளியில் குப்பைகள் எரிப்பது தொடர்பான புகார்கள் அதிகபட்சமாக 9,752 ஆகப் பதிவாகியுள்ளன.
அதற்கு அடுத்ததாக துர்நாற்றம் தொடர்பாக 1,697 புகார்களும், தூசி தொடர்பாக 796 புகார்களும், தொழிற்சாலை வெளியேற்றம் தொடர்பாக 388 புகார்களும், புகை தொடர்பாக 117 புகார்களும் பெறப்பட்டுள்ளன.
திறந்தவெளி எரிப்பு தொடர்பான புகார்களிலும் சிலாங்கூர் மாநிலமே அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. சிலாங்கூரில் மட்டும் 2,849 புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், ஜோகூரில் 1,338, பேராக்கில் 870, பினாங்கில் 792 மற்றும் கோலாலம்பூரில் 774 புகார்கள் பதிவாகியுள்ளன.

இந்த புகார்களை சுற்றுச்சூழல் துறையின் புகார் மேலாண்மை அமைப்பு, இணையவழி புகார் தளம், அவசரத் தொலைபேசி சேவை மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் சமர்ப்பித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி சுற்றுச்சூழல் துறை மொத்தம் 3,567 அபராதத் தொகை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு RM2.8 மில்லியன் என்றும் சைஃபுல் சாலிஹின் தெரிவித்தார்.







