கோம்பாக்–உலு லங்காட் புவியியல் பூங்கா யுனெஸ்கோ அங்கீகாரத்தைப் பெற மாநில அரசு இலக்கு

28 அக்டோபர் 2026, 7:15 AM
கோம்பாக்–உலு லங்காட் புவியியல் பூங்கா யுனெஸ்கோ அங்கீகாரத்தைப் பெற மாநில அரசு இலக்கு

அம்பாங் ஜெயா, அக். 28: கோம்பாக்–உலு லங்காட் புவியியல் பூங்காவின் (GHL Geopark) மறுமதிப்பீடு, தற்போதைய அங்கீகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையாக மட்டுமல்லாமல், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்களை மதிப்பீடு செய்து, எதிர்கால வளர்ச்சிக்கான மேம்பாட்டு வழிகளை அடையாளம் காண்பதற்கான முக்கிய வாய்ப்பாகவும் அமைகிறது.

இதனை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மறுமதிப்பீட்டுக் குழுவினர் முன்வைக்கும் கருத்துகள், கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகள், GHL புவியியல் பூங்காவின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கிய வழிகாட்டியாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி

நேற்று இரவு இங்கு நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான GHL புவியியல் பூங்கா மறுமதிப்பீட்டு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

இயற்கை மரபுச் செல்வங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள், உள்ளூர் பொருளாதார வளர்ச்சி, சமூகங்களின் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றுக்கும் பங்களிக்க முடியும் என்பதை GHL புவியியல் பூங்கா நிரூபித்துள்ளதாக அமிருடின் கூறினார்.

இத்தகைய அணுகுமுறை, புவியியல் பூங்காவின் சர்வதேச அங்கீகாரத்தை வலுப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவின் உலகப் புவியியல் பூங்கா (UNESCO Global Geopark) அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற மாநில அரசின் இலக்குக்கும் ஏற்ப அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த முயற்சிகள் மாநில அரசு, அமைச்சுகள், ஊராட்சி மன்றங்கள், கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், அத்துடன் உள்ளூர் சமூகங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், GHL புவியியல் பூங்காவின் தனித்துவங்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வலுவான தகவல் தொடர்பு மற்றும் விளம்பர நடவடிக்கைகள் அவசியம் என்றும் அமிருடின் வலியுறுத்தினார்.

அந்த வகையில், டூரிஸம் சிலாங்கூர் மற்றும் கேனன் மார்க்கெட்டிங் மலேசியா நிறுவனத்துக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒத்துழைப்பை அவர் வரவேற்றார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoC) மூலம், GHL புவியியல் பூங்காவின் சிறப்பம்சங்களை ஆவணப்படுத்துவதற்கும், படைப்பாற்றல் மிக்க உயர்தரக் காட்சிப் பதிவுகள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்கள் வாயிலாக அவற்றை விளம்பரப்படுத்துவதற்கும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு தேசிய புவியியல் பூங்கா என்ற அங்கீகாரத்தைப் பெற்ற GHL புவியியல் பூங்கா, 1,12,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.

இதில் இரண்டு மாவட்ட மற்றும் நில அலுவலகங்களின் நிர்வாகப் பகுதிகள், மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார வரம்புகள் மற்றும் 20 முக்கிய புவியியல் தளங்கள் இடம்பெற்றுள்ளன.

இப்பகுதி குறிப்பிடத்தக்க புவியியல் வளங்கள், பல்லுயிர்ப் பெருக்கம், கலாச்சார மரபுகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்சங்களைக் கொண்டுள்ளது.

GHL புவியியல் பூங்காவின் மறுமதிப்பீடு அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய புவியியல் பூங்கா என்ற அங்கீகாரத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான தகுதியை மதிப்பிடும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மறுமதிப்பீடு நடத்தப்படுகிறது.

இந்த மதிப்பீட்டுக் குழுவுக்கு பேராசிரியர் எமரிட்டஸ் டாக்டர் பெலிக்ஸ் டோங்குல் தலைமை தாங்குகிறார். மேட்லின் ஜார்ஜ் பாவ் மற்றும் ஃபிரடோலின் ஜாவினோ ஆகியோர் பார்வையாளர்களாகப் பங்கேற்கின்றனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.