ஷா ஆலம், டிச 3: கோம்பாக்–உலு லாங்காட் ஜியோபார்க்கின் (GHLGp) ஆற்றங்கரைப் பகுதிகளில் நடைபெறும் பொழுதுபோக்கு மற்றும் வணிக நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) ஒரு வழிகாட்டியைத் தயாரித்து வருகிறது. இது அடுத்த ஆண்டு மத்தியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழிகாட்டு விதிமுறைகள் கம்போங் கெமென்சா, தாமான் மெலாவத்தி மற்றும் கிள்ளான் கேட்ஸ் போன்ற பகுதிகளில் முறையான நிர்வாகத்தை உருவாக்கும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டது. இப்பகுதிகள் தற்போது ஜியோபார்க் மண்டலத்தின் கீழ் பல்வேறு செயல்பாடுகள் நடைபெறும் இடங்களாக உள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருகையாளர் பாதுகாப்பு மற்றும் வணிக அனுமதிகள் போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த வழிக்காட்டி பல மாநில நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது என எம்பிஏஜே துணைத் தலைவர் ஹஸ்ரோல்னிசாம் ஷாஹ்ரி தெரிவித்தார்.
“எங்களின் நோக்கம் மனிதச் செயல்பாடுகளை ஜியோபார்க் கொள்கையுடன் இணங்கச் செய்வதே ஆகும், குறிப்பாக ஆற்றங்கரையோர நடவடிக்கைகளுக்கு இது பொருந்தும்,” என்று தீ ஸ்டாரிடம் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த வழிகாட்டி 2026 மத்தியில் முடிவடையும் மற்றும் அதே ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
காபி கடைகள், சுற்றுலா சேவை போன்ற பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்தையும் முழுமையாகப் பதிவுசெய்யும் பட்டியல் அவசியமானது. இது ஒரே மாதிரியான மற்றும் நிலையான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க உதவும் என்றார்.
முன்னதாக, கம்போங் கெமேன்சா பகுதியில் 70 கடைகள் அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக எம்பிஏஜே கண்டறிந்தது. இவை வேளாண்மை மற்றும் குடியிருப்பு பயன்பாட்டுக்கான நிலப் பிரிவுகளாக இருப்பதால், அனுமதி பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
“ஜியோபார்க் நோக்கங்களுக்கு ஏற்ப எந்த செயல்பாடுகள் அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும் அவை எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட வழிகாட்டியை உருவாக்கும் பொருட்டு, அனைத்து நடவடிக்கைகளையும் ஆவணப்படுத்தி வருகிறோம்,” என்று அவர் விளக்கினார்.
சுற்றுச்சூழல் மற்றும் வருகையாளர் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய செயல்பாடுகளைத் தடுக்க, எம்பிஏஜே தொடர்ந்து கண்காணிப்பை கடுமையாக மேற்கொண்டு வருவதாக ஹஸ்ரோல்னிசாம் தெரிவித்தார்.


