அம்பாங், அக். 27 - தெராதாய் (Teratai) சட்டமன்றத் தொகுதியில் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்காக, ஆற்றங்கரைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை மேம்படுத்த உலு லங்காட் நீர்ப்பாசன வடிகால் துறை 2 கோடியே 40 லட்சம் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
சுங்கை கெராயோங் (Sungai Kerayong) மற்றும் சுங்கை செபுத்தே (Sungai Seputeh) ஆகிய ஆறுகளை உள்ளடக்கிய இந்தத் திட்டம், தற்போது ஆரம்பக்கட்ட மதிப்பீட்டு நிலையில் உள்ளதாகவும், இதன் மேம்பாட்டுப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெராதாய் சட்டமன்ற உறுப்பினர் இயூ ஜியா ஹாவ்ர் (Yew Jia Haur) தெரிவித்தார்.
"வெள்ள அபாயம் அதிகமாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அங்குள்ள வடிகால்கள் மற்றும் நதிக்கரைகளை, முன்னுரிமை அடிப்படையில் முதலில் மேம்படுத்துமாறு உலு லங்காட் நீர்ப்பாசனத் துறையைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
வெள்ளக் கட்டுப்பாட்டுப் பணிகளுக்குப் பெருமளவிலான நிதி தேவைப்படுவதால், அப்பகுதிகளின் தேவையைப் பொறுத்து இத்திட்டங்கள் படிப்படியாகச் செயல்படுத்தப்பட வேண்டும்" என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மூன்றாம் கட்ட தாமான் மூடா அம்பாங் (Taman Muda Ampang Fasa 3) குடியிருப்புப் பகுதிக்கு பின்புறம் அமைந்துள்ள நதிக்கரையைச் சீரமைக்கும் பணியை உலு லங்காட் நீர்ப்பாசனத் துறை 3 லட்சத்து 20,000 ரிங்கிட் செலவில் நிறைவு செய்துள்ளது.
பல வெள்ள வடிகால்களில் இருந்து வரும் தண்ணீர் இப்பகுதியில் ஒன்று திரண்டு, பின்னரே சுங்கை கெராயோங் நதிக்குச் செல்வதால், வடிகால் அமைப்பு முறையாகச் செயல்படுவதற்கு இந்த நதிக்கரையின் நிலை மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
தற்போது நதிக்கரை சீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ள போதிலும், அப்பகுதியில் இன்னும் காட்டுப் புற்கள் மற்றும் கலைச்செடிகள் மண்டியுள்ளன.
இந்த புற்கள் நீரோட்டத்தைப் பாதிக்காமல் இருக்க, அவற்றைச் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளுமாறு நீர்ப்பாசனத் துறையிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் இயூ ஜியா ஹாவ் மேலும் தெரிவித்தார்.






