பிரெஞ்சு பொது விருதை வென்றனர் வெய் சோங்-காய் வுன் ஜோடியினர்

26 அக்டோபர் 2026, 3:37 AM
பிரெஞ்சு பொது விருதை வென்றனர் வெய் சோங்-காய் வுன் ஜோடியினர்

கோலாலம்பூர், அக் 26: தேசிய இரட்டையர் ஜோடியான மான் வெய் சோங் - டீ காய் இணையினர் இப்பருவத்தின் முதல் வெற்றியாளர் பட்டத்தை வாகை சூடினர்.

நேற்று நடைபெற்ற 2026 பிரெஞ்சு பொது விருது பூப்பந்து போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதியாட்டத்தில் , சக நாட்டு இணையினரான கோ ச்சே ஃபீ - நூர் இசுதீன் ரும்சானியை அவர்கள் வீழ்த்தினர்.

இத்தொடரின் முக்கிய தேர்வு ஆட்டக்காரர் அல்லாத வெய் சோங் - காய் வுன் ஜோடியினர், இறுதிப் போட்டியின் முதல் செட்டை 13-21 என இழந்த போதிலும், இரண்டாவது செட்டில் பலமாக மீண்டெழுந்து ஆறாம் நிலை ஜோடியான ச்சே ஃபீ - நூர் இசுதீனை 21-15 என்ற கணக்கில் தோற்கடித்து போட்டியை மூன்றாவது செட்டிற்கு இட்டுச் சென்றனர்.

உலகத் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள இந்த ஜோடியினர், கிராண்ட் பாரிஸ் அரங்கில் 44 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதி செட்டை 21-7 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தனர்.

கடந்த ஆண்டு மலேசிய மாஸ்டர்ஸ் தொடரை வென்றப் பிறகு இந்த ஜோடியினர் பெறும் முதல் விருது இதுவாகும்.

அதே வேளையில், இப்பருவத்தில் தங்களது மூன்றாவது விருதை வெல்லும் ச்சே ஃபீ - நூர் இசுதீன் ஜோடியின் வாய்ப்பை இந்த வெற்றி தடுத்துள்ளது.

உலகத் தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ள ச்சே ஃபீ - நூர் இசுதீன் ஜோடி, இவ்வாண்டு ஜனவரியில் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் விருதையும் ஜூன் மாதத்தில் இந்தோனேசிய பொது விருதையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் வெய் சோங் - காய் வுன் ஜோடியினர் USD70,300 (சுமார் RM287,196) ரொக்கப் பரிசைத் தட்டிச் சென்றனர்.

இரண்டாம் இடம் பிடித்த ச்சே ஃபீ - நூர் இசுதீன் ஜோடியினர் USD33,250 (சுமார் RM135,836) பரிசைப் பெற்றனர்.

மேலும், இந்த வெற்றியின் மூலம் பிரெஞ்சு பொது விருது ஆடவர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் 22 ஆண்டுகால விருது காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கு முன்பு 2004-ஆம் ஆண்டில் கான் டீக் சாய் - கூ கியென் கியாட் ஜோடியினர் இவ்விருதை வென்றிருந்தனர்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.