ஷா ஆலாம், அக். 23 – சிலாங்கூரின் இலவச கூடுதல் வகுப்புத் திட்டமான PTRS-இல் பங்கேற்கும் மாணவர்களில், எஸ்.பி.எம். தேர்வில் குறைந்தது 8A பெறும் 100 மாணவர்களுக்கு தலா RM500 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
ஷா ஆலாம் சுல்தான் சலாவுடின் அப்துல் அஸீஸ் ஷா பள்ளிவாசலில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு எஸ்.பி.எம். மாணவர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனை யாயாசான் MBI தலைமைச் செயல் அதிகாரி அஹ்மட் அஸ்ரி சைனால் நோர் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி முயற்சிகளையும் சிறந்த தேர்ச்சி அடைவதற்கான உழைப்பையும் அங்கீகரித்து, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படுவதாக அஹ்மட் அஸ்ரி குறிப்பிட்டார்.
இதற்கிடையில், PTRS திட்டம், ePTRS இணையவழித் தளம் மற்றும் நேரடி கூடுதல் வகுப்புகள் மூலம் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி வருகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PTRS திட்டம், குறைந்த வருமானம் கொண்ட B40 குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள நான்காம், ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு உதவி வழங்குகிறது.

இத்திட்டத்தின் கீழ் மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் கூடுதல் கணிதம் ஆகிய பாடங்களில் கூடுதல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு PTRS பாடத்திட்டத்தில் உயிரியல் பாடத்தையும் புதிதாக இணைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்த முடியும் என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாகத் தெரிவித்திருந்தார்.






