ஷா ஆலாம், அக். 19 – சிலாங்கூரின் இலவச டியூசன் திட்டமான ``Program Tuisyen Rakyat Selangor`` (PTRS), அடுத்த ஆண்டு மூன்றாம் படிவ மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பாக, மாணவர்களின் கணிதப் பாடத் திறனை ஆரம்பத்திலேயே மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை மந்திரி பெசார் சிலாங்கூர் அறக்கட்டளையின் (Yayasan MBI) தலைமை நிர்வாகி அஹ்மட் அஸ்ரி சைனால் நோர் தெரிவித்தார். இத்திட்டத்தை விரிவுபடுத்துவதுடன், அதன் செயல்திறனையும் மேம்படுத்துவதன் மூலம் சிலாங்கூரில் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.பி.எம் தேர்வை எதிர்கொள்வதற்கு முன்னதாகவே மாணவர்கள் கணிதப் பாடத்தில் வலுவான அடித்தளத்தைப் பெறுவதை உறுதிசெய்வதே இந்த முன்மொழிவின் முக்கிய நோக்கம் என அஹ்மட் அஸ்ரி விளக்கினார்.
நாடு முழுவதும் கணிதப் பாடத்தில் மாணவர்களின் அடைவு நிலை கவலைக்குரியதாக இருப்பதால், எஸ்.பி.எம் தேர்வை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் கணிதப் பாடத்திற்கான ஆரம்பகட்டத் தலையீட்டை நான்காம் படிவத்திலிருந்து மூன்றாம் படிவத்திற்கே முன்கூட்டியே கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு அண்மையில் நடைபெற்ற கல்வி தொடர்பான STANCO கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்டதாகவும், 2027ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்டத்தில் PTRS திட்டத்திற்காகக் கூடுதலாக 20 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அஹ்மட் அஸ்ரி கூறினார்.
இந்தக் கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட்டால், PTRS மற்றும் Didik Kasih உள்ளிட்ட கல்வித் திட்டங்களுக்கான மொத்த உத்தேச நிதி ஒதுக்கீடு 1 கோடியே 40 லட்சம் ரிங்கிட்டை எட்டும். நடப்பாண்டில் இத்திட்டங்களுக்காக 1 கோடியே 20 லட்சம் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மூன்றாம் படிவ மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்துவதுடன், ePTRS இணையத் தளத்தையும் மேம்படுத்த அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் இணையவழியில் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக ஊடாடும் பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அஹ்மட் அஸ்ரி கூறினார்.

இதனிடையே, PTRS திட்டம் சிலாங்கூரின் எஸ்.பி.எம் மாணவர்களின் கல்வி அடைவுநிலையை மேம்படுத்துவதில் பங்களித்ததற்காக, மாநிலக் கல்வித் துறையிடமிருந்து (JPN Selangor) தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பாராட்டுக் கடிதங்களைப் பெற்றுள்ளதாக முன்னதாக அஹ்மட் அஸ்ரி தெரிவித்திருந்தார்.
மாநிலத்தின் எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளில், மாநில சராசரி தரப் புள்ளி (Gred Purata Negeri – GPN) ஆண்டுதோறும் மேம்பட்டு வருவதற்கு PTRS திட்டமும் பங்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
PTRS என்பது குறைந்த வருமானம் கொண்ட B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு இலவச கூடுதல் வகுப்புகளை வழங்கும் திட்டமாகும்.
தற்போது, நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் கூடுதல் கணிதம் ஆகிய ஆறு பாடங்களில் இத்திட்டத்தின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.






