பெட்டாலிங் ஜெயா, செப். 3: வெயில், மழை, குறிப்பிட்ட நேரத்திற்குள் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் ஆகியவற்றுக்கு மத்தியில் உணவுப்-பொருள் விநியோகிப்பாளர்களான பி-ஹெய்லிங் ஓட்டுநர்கள் பணியாற்றுகின்றனர்

இனி சிலாங்கூர் பி-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு, பாதுகாப்பாக ஓய்வெடுக்கவும், அடுத்த விநியோகத்துக்காகக் காத்திருக்கவும் சிறப்பு ஓய்விடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
‘TEDUH’ எனப்படும் Tempat Elok untuk Hentian ஓய்விட வசதி சிலாங்கூரில் உள்ள 12 ஊராட்சி மன்றங்களிலும் (PBT) அமைக்கப்பட்டுள்ளதாக புத்தாக்க விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மி ஙாக தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் TEDUH வசதியை உருவாக்க RM30,000 நிதி ஒதுக்கியுள்ளதாக முகமட் ஃபஹ்மி தெரிவித்தார்.
பி-ஹெய்லிங் ஓட்டுநர்களின் எண்ணிக்கை மற்றும் ஓய்விடத்தின் அளவைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்கள் தங்களது சொந்த திறனுக்கு ஏற்ப கூடுதல் ஒதுக்கிட்டை வழங்கலாம் என அவர் கூறினார்.
இதற்கிடையில், ஒவ்வொரு TEDUH ஓய்விடமும் சில அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அவற்றில் மின்விசிறிகள், இருக்கைகள், மேற்கூரையுடன் கூடிய மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடம் மற்றும் கைப்பேசிகளை மின்னேற்றம் செய்வதற்கான வசதி ஆகியவை இடம்பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.






