பெர்சியாரான் மொக்தார் டஹாரி சாலை படிப்படியாக மேம்படுத்தப்படும்

22 அக்டோபர் 2026, 10:11 AM
பெர்சியாரான் மொக்தார் டஹாரி சாலை படிப்படியாக மேம்படுத்தப்படும்
பெர்சியாரான் மொக்தார் டஹாரி சாலை படிப்படியாக மேம்படுத்தப்படும்

ஷா ஆலாம், அக் 22 - பெர்சியாரான் மொக்தார் டஹாரி (Persiaran Mokhtar Dahari) சந்திப்பை மேம்படுத்தும் பணிகள் தற்போது படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அது குறித்த விரிவான விவரங்கள் எதிர்வரும் அக்டோபர் 29 ஆம் தேதி அறிவிக்கப்படுமென மாநில செயற்குழு உறுப்பினர் டத்தோ இசாம் ஹாஷிம் தெரிவித்தார்.

அந்தச் சாலைப் பகுதி பொதுப் பணித்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும், அச்சாலை அப்பகுதியின் வீடமைப்பு மேம்பாட்டாளரின் பங்களிப்பைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'ஆற்றின் நண்பர்கள்' (Friends of Rivers) எனும் பட்டறையைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த சில காலம் எடுக்கும் என்றும், திட்டத்தின் வடிவம் மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் திங்கள்கிழமை விரிவாக விளக்கப்படும் என்றும் கூறினார்.

அதே வேளையில், இந்தச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தைக் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி ஆலாம் புடிமான் (Alam Budiman) சந்திப்பில் நிகழ்ந்த பயங்கர விபத்துடன் பொதுமக்கள் தொடர்புபடுத்த வேண்டாம் என்று டத்தோ இசாம் கேட்டுக்கொண்டார்.

ஒரு லாரி மற்றும் 11 கார்கள் சம்பந்தப்பட்ட அந்த விபத்து, சாலையின் தரம் அல்லது கட்டமைப்புப் பிரச்சனையால் ஏற்படவில்லை என்றும், மாறாக ஓட்டுநரின் மோசமான நடத்தை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிலே ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

விபத்துகள் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், இந்தச் குறிப்பிட்ட சம்பவம் ஓட்டுநரின் அலட்சியத்தால் மட்டுமே நிகழ்ந்தது என்றார்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி புஞ்சாக் பெர்டானாவிலிருந்து புஞ்சாக் ஆலாம் நோக்கிச் சென்ற 10 டன் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, ஆலாம் புடிமான் போக்குவரத்து சமிக்ஞையில் நின்றுகொண்டிருந்த 11 கார்கள் மீது மோதியதில் இருவர் ஆபத்தான நிலையிலும் மேலும் இருவர் காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அந்த விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பெர்சியாரான் மொக்தார் டஹாரியில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு ஒரு கூடுதல் வழித்தடம் அமைக்கப்படும் என்று சிலாங்கூர் பொதுப் பணித்துறை கடந்த அக்டோபர் 12 -ஆம் தேதி அறிவித்திருந்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.