ஷா ஆலாம், நவ 2 : பெர்சியாரான் மொக்தார் டாஹாரி (B49) சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை அடுத்து, அப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு அச்சங்களைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் பல கட்ட மேம்பாட்டுத் திட்டங்களை சிலாங்கூர் பொதுப் பணித்துறை விவரித்துள்ளது.
கடந்த 2023 முதல் அக்டோபர் 2026 வரையிலான காலகட்டத்தில், மாநில அரசாங்கம் ஒதுக்கிய 42 லட்சம் ரிங்கிட் நிதி மூலம் தற்காலிக கூடுதல் பாதைகள், சாலை அறிவிப்புப் பலகைகள் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, 2027- ஆம் ஆண்டு மத்தியில் 30 லட்சம் ரிங்கிட் கூடுதல் நிதியுடன் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
இப்பணிகள் மூலம் புஞ்சாக் ஆலாமில் இருந்து ஷா ஆலாம் செல்லும் திசையில் ஒரு கூடுதல் சாலை வழி அமைக்கப்படுவதோடு, ஆலாம் புடிமான் சந்திப்பு மேம்பாடு மற்றும் வடிகால் அமைப்புகளும் சீரமைக்கப்படும்.
மேலும், நீண்ட காலத் திட்டமாக இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் கீழ் இந்தச் சாலையை ஒட்டுமொத்தமாக நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்த ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
இதில் DASH சந்திப்பில் இருந்து புடிமான் வேலி U15 சந்திப்பு வரையிலான பகுதிகள் தரம் உயர்த்தப்படும் என்றும், கிரீன்ஹில் ரெசிடென்ஸ் உள்ளிட்ட இரு சந்திப்புகளைத் தரம் உயர்த்த தனியார் நிறுவனங்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சிலாங்கூர் பொதுப் பணித் துறை தெரிவித்தது.
கடந்த அக்டோபர் 31 -ஆம் தேதி டிவி 3-இன் (TV3) முக்கிய செய்தி அறிக்கையில், பெர்சியாரான் மொக்தார் டஹாரி சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துகள் காரணமாகப் பொதுமக்கள் கொண்டுள்ள பாதுகாப்பு அச்சங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்தே இந்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.




