ஷா ஆலாம், அக். 21 – கடந்த மாதம் இரு போலீஸ் அதிகாரிகளைத் தாக்கியது தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளையும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் (AKPS) தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜெயின் மறுத்துள்ளார்.
54 வயதான முகமட் ஷுஹைலி, இன்று மாஜிஸ்திரேட் கைரத்துல் அனிமா ஜெலானி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை மறுத்து விசாரணை கோரியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று அவர் வெளியிட்ட தகவலில், நாட்டின் சட்ட நடைமுறைகளை எதிர்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாகவும், இவ்வழக்கில் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1-இல் இரு நபர்களை அவர் ஆவேசமாகக் கண்டிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதது. அதனை தொடர்ந்து, தம் மீது எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான முடிவை அரசாங்கத்திடம் விட்டுவிடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை புக்கிட் அமானில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை மேற்கொண்டு வருவதாகப் தேசிய காவல்துறைத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
மற்றவர்களுக்கு வேண்டுமென்றே உடல் வலி, நோய் அல்லது உடல் பலவீனத்தை ஏற்படுத்தும் குற்றத்தை உள்ளடக்கிய குற்றவியல் சட்டத்தின் 323ஆவது பிரிவின் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.







