காற்று மாசு குறியீடு 100-ஐத் தாண்டினால் பள்ளிகள் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்

26 ஆகஸ்ட் 2026, 4:55 PM
காற்று மாசு குறியீடு 100-ஐத் தாண்டினால்  பள்ளிகள் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 27 - காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு நூறைத் தாண்டும் பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் வெளிப்புற விளையாட்டுகள் உள்ளிட்ட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

வெயில் மற்றும் புகைமூட்டத்திற்கு மத்தியில், மாணவர்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த உத்தரவு மாநிலக் கல்வித் துறைகளுக்கும் மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, அதன் பொது இயக்குநர் முகமட் அசாம் அகமட் தெரிவித்தார்.

நீண்டகால வெப்பம் மற்றும் வறண்ட வானிலையின் போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 2016 ஆண்டின் ஐந்தாவது சுற்றறிக்கையையும், கடுமையான புகைமூட்டத்தின் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளுக்கு 2019 -ஆம் ஆண்டின் முதலாவது சுற்றறிக்கையையும் பள்ளிகள் பார்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

பள்ளிக்கூடங்களில், தற்போது நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டிகள், தற்போதைய குறியீட்டு அளவீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது உட்புறங்களுக்கு மாற்றப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.

மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, அவர்களை அதிக வெப்பத்திற்கு ஆளாக்கும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் போதுமான சுத்தமான குடிநீர் எப்போதும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதோடு, மாணவர்கள் தங்களின் சொந்தக் குடிநீரைக் கொண்டு வர ஊக்குவிக்கப்பட வேண்டும்.

மேலும், மாணவர்கள் தங்கள் உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும், விடுதி மாணவர்களுக்கு நிலைமை மோசமடைந்தால் குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புகைமூட்டம் மற்றும் வெப்பமான வானிலையால் மாணவர்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்.

அதோடு, சுற்றுப்புறச் சூழல் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு அளவீடுகளையும் தற்போதைய நிலவரத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமெனவும் கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வகைpendidikan

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.