கிள்ளான் ஏயோன் பிக் (AEON BiG) பேரங்காடியில் வெடிகுண்டு இல்லை- போலீஸ் உறுதி

18 அக்டோபர் 2026, 2:37 AM
கிள்ளான் ஏயோன் பிக் (AEON BiG) பேரங்காடியில் வெடிகுண்டு இல்லை- போலீஸ் உறுதி

கிள்ளான், அக். 18 – கிள்ளான், ஜாலான் காப்பாரில் அமைந்துள்ள ஏயோன் பிக் (AEON BiG) பேரங்காடிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட முழுமையான சோதனையில் வெடிகுண்டுகளோ அல்லது சந்தேகத்திற்கிடமான சாதனங்களோ எதுவும் கண்டறியப்படவில்லை எனப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று பிற்பகல் இந்த மிரட்டல் தொடர்பான மின்னஞ்சல் கிடைத்துள்ளது. இது தொடர்பாகப் பேரங்காடியின் பொறுப்பாளர் மாலை சுமார் 4.04 மணியளவில் போலீசில் புகார் அளித்ததாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராம்சே எம்போல் தெரிவித்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட பேரங்காடி வளாகம் முழுவதும் போலீசார் விரிவான சோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையில், மோப்ப நாய்ப் பிரிவினர் (K9), சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், கிள்ளான் குடிமைத் தற்காப்புப் படையினர் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.

ஏறத்தாழ மூன்று மணி நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில், மிரட்டல் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததைப் போன்ற வெடிபொருட்களோ அல்லது சந்தேகத்திற்கிடமான சாதனங்களோ எதுவும் கண்டறியப்படவில்லை என்று ராம்சே எம்போல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

இதனிடையே, இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 507ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

பொதுமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் மின்னஞ்சல் அல்லது தகவல் தொடர்பு வழிகளைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என ராம்சே எம்போல் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 03-3291 9614 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலும் தகவல்களை வழங்கலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.