KLIA-இல் சட்டவிரோத டாக்ஸி சேவை வழங்கிய ஆடவர் கைது, வாகனம் பறிமுதல்

16 அக்டோபர் 2026, 9:30 AM
KLIA-இல் சட்டவிரோத டாக்ஸி சேவை வழங்கிய ஆடவர் கைது, வாகனம் பறிமுதல்

ஷா ஆலாம், அக். 16 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) முனையம் 1-இல் சட்டவிரோதமாக டாக்ஸி சேவையை வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பயன்படுத்திய பெரோடுவா அல்சா ரகக் காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) தெரிவித்தது.

அந்த ஆடவர், ஷா ஆலாம் செல்ல விரும்பிய இரண்டு வங்கதேச நாட்டவர்களிடம் போக்குவரத்துச் சேவையை வழங்க முன்வந்து, அதற்காக 100 ரிங்கிட் கட்டணம் கேட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதனை சிலாங்கூர் ஜேபிஜே தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

இச்சம்பவம் தொடர்பாக, 2010ஆம் ஆண்டின் தரைவழிப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் 205(1)ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனச் சிலாங்கூர் ஜேபிஜே தெளிவுப்படுத்தியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு 50,000 ரிங்கிட்டுக்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் அல்லது இவ்விரு தண்டனைகளும் ஒருசேர விதிக்கப்படலாம்.

மேலும், சட்டவிரோதப் போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்க உதவுபவர்களுக்கும் அதே சட்டத்தின் 243(1)ஆவது பிரிவின் கீழ் எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என அத்துறை எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்துச் சேவைகளை மட்டுமே பயன்படுத்துமாறு சிலாங்கூர் ஜேபிஜே அறிவுறுத்தியுள்ளது.

போக்குவரத்து தொடர்பான புகார்களை aduantrafik@jpj.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது e-aduan@JPJ செயலி வழியாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.